என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில் அருகே யானை மிதித்து லாரி டிரைவர் பலி சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில் அருகே யானை மிதித்து லாரி டிரைவர் பலி](https://media.maalaimalar.com/h-upload/2022/09/15/1762013-death.jpg)
சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில் அருகே யானை மிதித்து லாரி டிரைவர் பலி
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- மலைபாதையில் இரவு நேரத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதால் காலையில் செல்ல பண்ணாரியம்மன் கோவில் அருகே சீனிவாசன் லாரியை நிறுத்தினார்.
- ஏராளமான லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.
சத்தியமங்கலம்:
கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (40) லாரி டிரைவர். இவர் கோவை மாவட்டம் சூலூருக்கு லோடு ஏற்றிக்கொண்டு சென்றார்.
அங்கு லோடு இறங்கி விட்டு மீண்டும் நேற்று இரவு 11 மணியளவில் சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில் அருகே வந்தார். அப்போது இரவு நேரத்தில் மலைபாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதால் காலையில் செல்ல பண்ணாரியம்மன் கோவில் அருகே லாரியை நிறுத்தினார்.
இதே போல் ஏராளமான லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது நள்ளிரவு 12 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை பண்ணாரியம்மன் கோவில் பகுதிக்கு வந்தது.
அப்போது அந்த ஒற்றை யானை வாகனங்களை நோக்கி வந்தது. அப்போது சீனிவாசன் மற்றும் டிரைவர்கள் யானையை விரட்டினர். மேலும் வனத்துறையினரும் பட்டாசு வெடித்து யானையை விரட்ட முயன்றனர்.
இந்த நிலையில் அந்த யானை திடீரென விரட்டியவர்களை நோக்கி ஓடி வந்தது. அப்போது அனைவரும் யானையிடம் இருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது சீனிவாசனும் தப்பி ஓடினார். அந்த நேரத்தில் திடீரென கீழே இருந்த கல் தடுக்கி அவர் கீழே விழுந்தார்.
இதையடுத்து சீனிவாசனை யானை மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். அனைவரது கண் முன்பே அவர் துடிதுடித்து பலியானார். பின்னர் சத்தம் போட்டும், பட்டாசு வெடித்தும் யானையை விரட்டினர்.
பின்னர் யானை தாக்கி பலியான சீனிவாசன் உடலை சத்தியமங்கலம் போலீசார் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.