என் மலர்
உள்ளூர் செய்திகள்
மேலசூரங்குடி அருகே குளத்தில் தொழிலாளி பிணம்
- குளத்தில் ஆண் உடல் மிதந்த செய்தி கேட்டு அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
ராஜாக்கமங்கலம்:
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள மேல சூரங்குடியை அடுத்துள்ளது கார்த்திகை வடலி கிராமம்.
இங்குள்ள குளத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும் அந்த வழியே செல்பவர்களும் குளிப்பது வழக்கம். இன்று காலை குளிக்கச் சென்றவர்கள், குளத்திற்குள் ஒரு ஆண் உடல் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதற்கிடையில் குளத்தில் ஆண் உடல் மிதந்த செய்தி கேட்டு அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர் நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள பிள்ளையார் குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 42) என தெரிய வந்தது. இவர் கார்த்திகை வடலி பகுதியில் செயல்பட்டு வரும் துரித உணவகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். புன்னை நகர் பகுதியில் வீடு எடுத்து தங்கி உள்ளார்.
நேற்று ஊருக்குச் செல்வதாக வேலை பார்த்த இடத்தில் உள்ளவர்களிடம் கருப்பசாமி தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் தான் அவர் குளத்தில் பிணமாக மிதந்துள்ளார். கருப்பசாமி எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது.
குளத்தின் கரை அருகே மது பாட்டில்கள் கிடப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே கருப்பசாமி மது குடித்து விட்டு போதையில் குளத்தில் தவறி விழுந்ததில் மூச்சு திணறி இறந்திருக்கலாமா? அல்லது வேறு ஏதும் காரணம் இருக்கலாமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.