search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம்: 11-ந்தேதி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
    X

    50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம்: 11-ந்தேதி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

    • கோவை மாவட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்த்துவிட்டு அ.தி.மு.கவினர் பதில் கூற வேண்டும்.
    • ஏதோ குறை சொல்ல வேண்டும் என்பதற்காக தவறான தகவல்களை கூறக்கூடாது.

    கோவை:

    கோவையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (10-ந்தேதி) காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    பின்னர் அவர் கார் மூலமாக ஈரோடு செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 11-ந்தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

    தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் கோவையில் உள்ள தொழில் முனைவோர்கள் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு விமான நிலைய விரிவாக்க பணியை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுத்தார். இதில் தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி 85 சதவீதம் முடிவடைந்துள்ளது. விரைவில் முழு பணிகளும் நிறைவு பெறும்.

    கோவை மாவட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்த்துவிட்டு அ.தி.மு.கவினர் பதில் கூற வேண்டும். ஏதோ குறை சொல்ல வேண்டும் என்பதற்காக தவறான தகவல்களை கூறக்கூடாது.

    கோவை மாவட்டத்தில் நடந்து வரும் மேம்பால பணிகளை விரைவில் முடிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். குறிப்பாக அவிநாசி ரோடு மேம்பால பணிகளுக்காக சில வழக்குகள் நிலுவையில் இருந்தது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசி சுமூக நடவடிக்கை எடுத்ததன் பேரில் தற்போது பாலப்பணிகள் விரைவாக நடந்து வருகிறது. அனைத்து மேம்பால பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×