என் மலர்
உள்ளூர் செய்திகள்
சனாதன கோட்பாடுகளை ஒழிக்க தி.மு.க. தொடர்ந்து போராடும்: அமைச்சர் உதயநிதி மீண்டும் ஆவேச பேச்சு
- சனாதன கோட்பாடுகளை ஒழிக்கும் வரை தி.மு.க. போராடி கொண்டே இருக்கும்.
- தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய தி.மு.க. முழு முயற்சி எடுத்து வருகிறது.
தூத்துக்குடி:
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசியபோது, மலேரியா, டெங்கு, கொரோனா ஆகியவற்றை எப்படி ஒழித்தோமோ, அதே போல் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று பேசினார்.
அவரின் இந்த பேச்சுக்கு பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இது தொடர்பாக வடமாநிலங்களில் உதயநிதி மீது போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதி தலையை சீவுபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தூத்துக்குடி புதுக்கோட்டையில் நேற்றிரவு நடந்த தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டின் பெயரே சனாதன ஒழிப்பு மாநாடு தான். அதில் நான் சனாதனத்தை ஒழிக்க வேண்டும்.
மலேரியா, டெங்கு, காலரா, கொரோனாவை எப்படி ஒழித்தோமோ அதே போல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றேன். இப்படி பேசுவதால் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் இருக்கும் என்று அந்த மேடையிலேயே கூறினேன்.
அது போல் தற்போது இந்தியா முழுவதும் அமித்ஷா முதல் ஜே.பி. நட்டா வரை என்னை பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்னை கைது செய்ய நாடு முழுவதும் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
சனாதனத்தை எதிர்த்து அன்று அம்பேத்கார், பெரியார், கலைஞர் போராடினார்கள். அவர்களது வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வரை போராடிக் கொண்டிருக்கிறார்.
சனாதன கோட்பாடுகளை ஒழிக்கும் வரை தி.மு.க. போராடி கொண்டே இருக்கும். இதனால் தி.மு.க. இந்து விரோத கட்சி என திரித்து பேசுகிறார்கள்.
சனாதனம் என்றால் யாரும் கேள்வி கேட்கக்கூடாது. எல்லாமே நிலையானது என்பது தான். 100 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. 70 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் படிக்க கூடாது. மேலாடை அணியக் கூடாது என்றனர்.
இதையெல்லாம் உடைத்தது தி.மு.க. தான். என்னை மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். நான் கலைஞரின் பேரன்; மன்னிப்பு எல்லாம் கேட்கமாட்டேன். எல்லா மாநிலத்திலும் என் மீது வழக்குகள் கொடுத்து வருகின்றனர். இதற்கெல்லாம் அஞ்சமாட்டேன்.
கடந்த 2½ ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் இல்லம் தேடி கல்வி, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து, கலைஞர் மகளிர் உரிமை திட்டம், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. பிற மாநிலங்களில் இருந்து அமைச்சர்கள் வந்து தமிழ்நாட்டின் திட்டங்களை வாழ்த்தி செல்கின்றனர்.
இந்த திட்டங்களால் பயன்பெற்றது 99 சதவீதம் இந்துக்கள் தான். நான் இனப்படுகொலையை தூண்டி விடுவதாக கூறுகின்றனர். உண்மையில் குஜராத்திலும், தற்போது மணிப்பூரிலும் இனக்கலவரத்தை தூண்டி விடுவது மோடியும், அமித்ஷாவும் தான்.
மணிப்பூரில் கடந்த 5 மாதங்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 250 பேருக்கு மேல் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே பா.ஜ.க. தான் குஜராத்திலும், மணிப்பூரிலும் இனப்படுகொலையை செய்து காட்டியது.
சேலத்தில் டிசம்பர் 17-ந்தேதி நடைபெறும் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும். மாநாடு எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக சேலம் மாநாடு அமைய வேண்டும்.
சமீபத்தில் மதுரையில் ஒரு மாநாடு நடைபெற்றது. ஒரு மாநாடு எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு அது உதாரணமாக அமைந்தது. அந்த மாநாட்டில் தயிர் சாதம் நன்றாக இருக்கிறதா? புளி சாதம் நன்றாக இருக்கிறதா? என பட்டிமன்றம் நடந்தது.
ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை. நீட்டை கொண்டு வந்தது எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் இருந்து நுழைவு தேர்வை ரத்து செய்தது கலைஞர். அவர் கிராம புறங்களில் ஏழை மாணவர்கள் படித்து டாக்டராக வேண்டும் என நினைத்தார்.
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய தி.மு.க. முழு முயற்சி எடுத்து வருகிறது. என்றைக்கு தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வை முழுமையாக நீக்குகிறோமோ அன்று தான் நமக்கு முழுமையான வெற்றி. நீட்டுக்கு எதிரான அடுத்த போராட்ட களத்திற்கு தயாராக வேண்டும். அடுத்த போராட்டம் டெல்லியில் இருக்கும். அந்த போராட்டத்திற்கு தயாராக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.