என் மலர்
உள்ளூர் செய்திகள்
மொடக்குறிச்சி அருகே விவசாயியிடம் பணம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
- ராஜ்குமார் காரில் ரூ.35 லட்சம் பணத்தோடு அந்த 7 பேர் கொண்ட கும்பல் மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்றது.
- தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தீவிர மாக தேடி வருகின்றனர்.
மொடக்குறிச்சி:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்ன ஓலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவாஜி (வயது 67). விவசாயி. இவருக்கு தேனி மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள காலப்பண்பட்டி பாண்டி (50) என்பவர் தனது உறவினர் செந்தில் மூலம் அறிமுகமானார்.
இந்த நிலையில் சிவாஜியிடம், பாண்டி ஈரோட்டில் எனக்கு தெரிந்த ராஜ்குமார் என்பவரிடம் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் உள்ளன. ரூ.35 லட்சம் கொடுத்தால் ரூ.50 லட்சத்துக்கு 2000 ரூபாய் நோட்டுக்களை வழங்குவதாக கூறினார்.
இதையடுத்து சிவாஜி ரூ.15 லட்சம் கமிஷனாக கிடைப்பதாக நம்பி ரூ.35 லட்சத்தை தனது வங்கி கணக்கில் இருந்து எடுத்துக்கொண்டு உறவினர்கள் செந்தில், மாதேஷ்குமார் மற்றும் டிரைவர் குபேந்திரன் ஆகியோருடன் ஈரோடு மாவட்டம் லக்காபுரம் அருகே உள்ள பரிசல் துறைக்கு வந்தார்.
இது குறித்து ராஜ்குமாருக்கு சிவாஜி தகவல் தெரிவித்தார். பின்னர் ராஜ்குமார் 2 பேருடன் சம்பவ இடத்துக்கு வந்தார். இதை தொடர்ந்து ராஜ்குமார் தனது காரில் சிவாஜி, செந்தில் ஆகிய 2 பேரையும் அழைத்து கொண்டு பரிசல் துறையில் இருந்து பெருந்துறை நோக்கி புறப்பட்டார்.
இதையடுத்து கார் சிறிது தூரம் சென்றவுடன் எதிரில் வந்த ஒரு காரில் இருந்து 4 பேர் ராஜ்குமாரின் காரை வழிமறித்து நாங்கள் அரசு அதிகாரிகள் எனக் கூறி காரில் இருந்த சிவாஜி மற்றும் செந்தில் ஆகிய இருவரையும் கீழே இறக்கி விட்டனர். இதனை அடுத்து ராஜ்குமார் காரில் ரூ.35 லட்சம் பணத்தோடு அந்த 7 பேர் கொண்ட கும்பல் மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்றது.
இதை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதாக அறிந்த சிவாஜி மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் விவசாயிடம் பணம் பறித்த கார், கொள்ளையர்கள் பயன்படுத்திய செல்போன் எண்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கரூர் மாவட்டம் நாகம்பள்ளி அரசு மருத்துவமனை அடுத்த போஸ்ட் ஆபீஸ் தெரு மலைக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (58) என்பவரை மொடக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 6 பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் கொள்ளையர்களில் ஒருவரான அரசு அதிகாரி போல் போலீஸ் உடை அணிந்து நடித்த நாமக்கல் மாவட்டம் வேலூர் அடுத்த போத்தனூர் சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கட்டான் மகன் மாதேஷ் (59) என்பவரை பாசூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஈரோடு நகர குற்றப்பிரிவு மற்றும் மொடக்குறிச்சி போலீஸ் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் பாசூரில் பதுங்கி இருந்த மாதேஷை கைது செய்தனர்.
மாதேஷிடம் போலீசார் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அவர்கள் கொள்ளையடிக்க சொகுசு காரை பயன்படுத்தி வந்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் காரில் பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டியதுடன் தன்னை பல்வேறு பத்திரிகைகளில் பணிபுரிவதாக போலி அடையாள அட்டைகள் வைத்து கொண்டு அதை பல இடங்களில் காண்பித்து தப்பித்து வந்துள்ளார். இந்த காருக்கு 10-க்கும் மேற்பட்ட நம்பர் பிளேட்டுகள் மற்றும் காரையும் பயன்படுத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து அந்த காரை பறிமுதல் செய்து உள்ளனர். மேலும் கட்டு, கட்டாக வெள்ளை தாள் கொண்ட போலியான ரூபாய் நோட்டுகள், போலியான தங்க நகைகள், தராசு மற்றும் எடை கற்கள், போலீஸ் உடை, உள்ளிட்ட வைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தொடர்ந்து மாதேஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.