search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் புகுந்த மர்மநபர் ரோட்டில் இறந்து கிடந்ததால் பரபரப்பு
    X

    வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் புகுந்த மர்மநபர் ரோட்டில் இறந்து கிடந்ததால் பரபரப்பு

    • கோவை ஜி.டி. நாயுடு மியூசியம் முன்புறம் உள்ள அவினாசி சாலையில் வாலிபர் பிணமாக கிடந்தார்.
    • வாலிபர் வாகனம் மோதி இறந்தாரா, அல்லது எப்படி இறந்தார் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கோவை:

    கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் அருகே உள்ளது.

    இந்த எம்.எல்.ஏ. அலுவலகத்துக்குள் நேற்று மாலை 5.50 மணி அளவில் மர்ம வாலிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார். அலுவலகத்துக்குள் நுழைந்து உள்பக்கமாக கதவை பூட்ட முயன்றார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அலுவலக ஊழியர் அந்த வாலிபரை விரட்டினார். அவர் செல்ல மறுத்ததால் அவரை பிடித்து அலுவலகத்தின் வெளியே தள்ளினார். அதன்பிறகு அந்த வாலிபர் அங்கிருந்து எழுந்து சென்றார்.

    இந்தநிலையில் இரவு 8.30 மணி அளவில் கோவை ஜி.டி. நாயுடு மியூசியம் முன்புறம் உள்ள அவினாசி சாலையில் அதே வாலிபர் பிணமாக கிடந்தார். மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு விசாரித்து வருகிறார்கள்.

    அந்த வாலிபர் வாகனம் மோதி இறந்தாரா, அல்லது எப்படி இறந்தார் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    அந்த வாலிபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், பா.ஜ.க. எம்.எல்.ஏ. அலுவலகத்தில் அவர் எதற்காக நுழைந்தார் என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதுபற்றி வானதி சீனிவாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நேற்று மாலை எனது அலுவலகத்துக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் வந்துள்ளார். அவர் எதற்காக வந்தார், எந்த நோக்கத்துக்காக வந்தார் என்று தெரியவில்லை. அப்போது நான் அலுவலகத்தில் இல்லை. அந்த நபர் வந்த தகவலை எனது உதவியாளர் எனக்கு தெரிவித்தார்.

    இதுதொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸ்நிலையத்தில் புகார் அளிக்க கூறினேன். அதன்படி அவரும் புகார் அளித்தார். இந்த நிலையில் அலுவலகத்துக்குள் நுழைந்த மர்மநபர் அவினாசி சாலையில் இறந்து கிடந்ததாக தகவல் தெரிந்தது. அவர் யார் என்று தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×