என் மலர்
உள்ளூர் செய்திகள்
காதல் திருமணம் செய்த புதுப்பெண் காரில் கடத்தல்
- மாலதியின் தாயார் புதுமண தம்பதிகள் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றுள்ளார்.
- கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தென்னிமலை கிராமத்தை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு. இவரது மகன் கண்ணன் (வயது 21). இவர் மூன்றடைப்பு அருகே உள்ள தனியார் நூற்பாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
களக்காட்டை அடுத்த திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் மாலதி (20). இவரும் கண்ணன் வேலை பார்த்த அதே நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இவர்கள் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. சில மாதங்களாக 2 பேரும் காதலித்து வந்த நிலையில் 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதற்காக சமீபத்தில் மாலதியின் பெற்றோரிடம் கண்ணன் பெண் கேட்டு சென்றுள்ளார். அப்போது அவரது பெற்றோர் கண்ணனுக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டனர்.
இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு கண்ணனும், மாலதியும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் நெல்லையில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலதியின் தாயார் புதுமண தம்பதிகள் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றுள்ளார்.
அங்கிருந்த மகள் மற்றும் மருமகனிடம் திருமணத்திற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். மேலும் வீட்டில் அனைவரையும் சம்மதிக்க வைத்து விட்டதாக கூறி சொந்த ஊருக்கு 2 பேரையும் அவர் அழைத்துள்ளார்.
அதை நம்பிய கண்ணன் தனது மனைவியுடன் புறப்பட்டார். தொடர்ந்து 3 பேரும் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊருக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பொன்னாக்குடி விலக்கு பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் பஸ் நிறுத்தத்தில் அவர்கள் 3 பேரும் இறங்கி உள்ளனர்.
அவர்களை பின் தொடர்ந்து காரில் வந்த ஒரு கும்பல் கண்ணனை தாக்கி விட்டு மாலதியை காரில் கடத்தி சென்றது. அப்போது மாலதியின் தாயாரும் அந்த காரில் புறப்பட்டு சென்று விட்டார்.
உடனடியாக கண்ணன் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மனைவியை கடத்தி சென்ற கும்பல் குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அதில் மாலதியின் குடும்பத்தினர் அவரை திட்டமிட்டு கடத்தியது தெரியவந்தது. இதற்காக மாலதியை நைசாக பேசி நம்ப வைத்து அவரது தாயாரை வைத்து அழைத்து வந்ததும், பஸ்சை பின் தொடர்ந்து காரில் மாலதியின் தாய்மாமன்கள் வந்து மாலதியை கடத்தி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.