என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஓசூர் அருகே தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் மூச்சு திணறி பலி
- ஆசிட் ஊற்றி தண்ணீர் தொட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
- தொழிற்சாலையில் வட மாநில தொழிலாளர்களான சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர்:
ஓசூர் அருகேயுள்ள கர்நாடக மாநில எல்லையான ஆனேகள் பகுதியில் உள்ள சிகாரிபாலிய பகுதியில் சீனிவாஸ் என்பவருக்கு சொந்தமான தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் உட்பட பலர் பணிபுரிந்து வருகின்றனர்.
சம்பவத்தன்று அந்த தொழிற்சாலையில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த சகோதரர்கள் சந்தன் ரஜ் பன்சிங் (வயது31) மற்றும் பிந்டு ரஜ் பன்சிங் (22) ஆகிய இருவரும் தண்ணீர் தொட்டியில் இறங்கி ஆசிட் ஊற்றி தண்ணீர் தொட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் கூச்சலிட்டனர்.
அதனை கேட்ட தொழிற்சாலையின் உரிமையாளர் ஸ்ரீநிவாஸ் மற்றும் தொழிலாளிகள் தண்ணீர் தொட்டிக்கு சென்று பார்த்த போது இவரும் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளனர்.
அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஹெப்பாகுடி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்த வந்த போலீசார் 2 உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிற்சாலையில் வட மாநில தொழிலாளர்களான சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.