என் மலர்
உள்ளூர் செய்திகள்
ராஜபாளையம் அருகே ஆம்னி பஸ்-கார் மோதல்: என்ஜினீயர் பலி
- தென்காசியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ், காருடன் நேருக்கு நேர் மோதியது.
- காரில் வந்த தீபிகா, புவன்யாஸ்ரீ, ராஜா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.
ராஜபாளையம்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மணலூர் பகுதியைச் சேர்ந்தவர் புலியூரான் (வயது 35). இவர் கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நூற்பாலையில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவருக்கு தீபிகா (வயது27) என்ற மனைவியும், புவன்யாஸ்ரீ (வயது4) என்ற குழந்தையும் உள்ளனர்.
இந்தநிலையில் புலியூரான் அவரது மகள் புவன்யாஸ்ரீக்கு மணலூரில் உள்ள குலதெய்வ கோவிலில் மொட்டை போடுவதற்காக புலியூரான், தனது சகோதரர் ராஜா மற்றும் குடும்பத்தினருடன் சொகுசு காரில் ராஜபாளையம் வழியாக சங்கரன்கோவில் அருகே மணலூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றார்.
அந்த கார் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மதுரை ரோட்டில் மம்சாபுரம் விலக்கு அருகே சென்றபோது, தென்காசியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ், காருடன் நேருக்கு நேர் மோதியது. இதில் புலியூரான் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் காரில் வந்த தீபிகா, புவன்யாஸ்ரீ, ராஜா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் வன்னியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான புலியூரான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விவிபத்தில் காயமடைந்து காருக்குள் சிக்கி உயிருக்கு போராடிய தீபிகா, புவன்யாஸ்ரீ, ராஜா ஆகிய 3 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த முருகன் என்பவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விபத்தில் முருகனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பஸ்சில் வந்த 36 பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.
ராஜபாளையம் அருகே விபத்தில் என்ஜினீயர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.