என் மலர்
உள்ளூர் செய்திகள்
விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் செலுத்தும் விதமாக புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கடையடைப்பு
- பொதுமக்கள், அனைத்து வியாபாரிகள், தொழில் சங்கத்தினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
- விஜயகாந்த் படத்திற்கு பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பு.புளியம்பட்டி:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் மொட்டை அடித்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள், அனைத்து வியாபாரிகள், தொழில் சங்கத்தினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதன்படி இன்று காலை புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சத்தியமங்கலம் சாலை, கோவை சாலை, பவானி சாகர் சாலை, நம்பியூர் சாலையில் உள்ள அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டிருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் புளியம்பட்டி டவுன் பகுதி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதேப்போல் புளியம்பட்டி தினசரி மார்க்கெட் வாரச்சந்தை கடைகளும் இன்று ஒரு நாள் அடைக்கப்பட்டுள்ளது. தினசரி மார்க்கெட்டில் 120-க்கும் மேற்பட்ட கடைகளும், புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 500-க்கும் மேற்பட்ட கடைகளும் இன்று அடைக்கப்பட்டிருந்தன.
மேலும் விஜயகாந்த் படத்திற்கு பொதுமக்கள், தே.மு.தி.க. தொண்டர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.