என் மலர்
உள்ளூர் செய்திகள்

நம்பியூர் அருகே பொதுமக்களுடன், மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்

- வேலைக்கு செல்பவர்களும், மாணவர்களும் உரிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை.
- காந்திபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு பகுதியான நாச்சிபாளையம், காந்திநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் பெரும்பாலும் விவசாயக் கூலி தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இதேபோல் நம்பியூர் அரசு பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் பஸ் ஏறுவதற்காக ஒரு கிலோ மீட்டர் தொலைவை கடந்து அய்யன்கோவில் பஸ் நிறுத்தத்திற்கு சென்று அங்கிருந்து நம்பியூருக்கு சென்று வருகின்றனர்.
இதனால் வேலைக்கு செல்பவர்களும், மாணவர்களும் உரிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை. இதனையடுத்து காந்திபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்று செல்ல வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்காக அப்பகுதி மக்கள் பலமுறை நம்பியூர் அரசு போக்குவரத்து பணிமனைக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து மனுக்களும் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள், மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை 9 மணி அளவில் திடீரென சக்தி- நம்பியூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த திடீர் போராட்டத்தால் சாலையின் இருபுறம் வாகனங்கள் நீண்ட தொலைவில் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நம்பியூர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் நம்பியூர் அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் குமரேசன் ஆகியோர் பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகள் உங்கள் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்து காந்தி நகர் பகுதியில் பஸ் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதனை ஏற்று பொதுமக்களும், மாணவர்களும் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் ஒரு மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.