search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் மழை நீடிப்பு- பெருஞ்சாணி அணை 70 அடியை நெருங்குகிறது
    X

    குமரியில் மழை நீடிப்பு- பெருஞ்சாணி அணை 70 அடியை நெருங்குகிறது

    • திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது.
    • அருவியில் குளிப்பதற்கு இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது.

    நேற்றும் மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையில் மழை நீடித்தது. நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் வானத்தில் இருள் சூழ்ந்து காணப்பட்டது. அதன் பிறகு சாரல் மழை பெய்தது. காலை 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரமாக பெய்தது.

    சுசீந்திரம், கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி, தக்கலை, குளச்சல், ஆணைக்கிடங்கு, அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை நீடித்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 20.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. இன்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழந்தனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-20.6 பெருஞ்சாணி-4 சிற்றார்-1-15.4, சிற்றார்-2-19.2 பூதப்பாண்டி-1.4, குழித்துறை-4.4, மயிலாடி-2.8, நாகர்கோவில்-3 சுருளோடு-2.6, தக்கலை-8.4, பாலமோர்-16.8, மாம்பழத்துறையாறு-10, ஆரல்வாய்மொழி-1.2, கோழிப்போர்விளை-7.2, அடையாமடை-3, குருந்தன்கோடு-9, முள்ளங்கினாவிளை-12.2 ஆணைக்கிடங்கு-8.4.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42 அடியை கடந்து உள்ளது. இந்த நிலையில் அணையின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.63 அடியாக உள்ளது. அணைக்கு 1129 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 575 அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 69.70 அடியாக உள்ளது. அணைக்கு 791 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 310 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை நீர்மட்டம் இன்று மாலைக்குள் 70 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெய்த மழையின்போது அணையின் நீர்மட்டம் 70 அடியை கடந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதே 70 அடியை எட்டும் தருவாயில் உள்ளது.

    சிற்றார்-1 அணை நீர்மட்டம் 12 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 12.10 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 17 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 37.89 அடியாகவும் உள்ளது.

    Next Story
    ×