என் மலர்
உள்ளூர் செய்திகள்
பிரதமர் மோடி வருகையால் சென்னையில் விழாக்கோலம்- கலை நிகழ்ச்சிகள் நடத்தி பா.ஜனதா உற்சாகம்
- ஒரேநாளில் சென்னையில் 4 நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பிரதமர் இன்று இரவு மைசூர் சென்று தங்குகிறார்.
- சென்னை விமான நிலையம் அருகில் சுமார் 25 ஆயிரம் பேர் திரண்டு பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர்.
சென்னை:
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று சென்னை வந்தார்.
ஐதராபாத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு மதியம் 2.45 மணி அளவில் வருகை தந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரதமரை நேரில் வரவேற்றனர். மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.
இதைதொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் ரூ.2467 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதைதொடர்ந்து ஹெலிகாப்டரில் நேப்பியர் பாலம் அருகில் உள்ள அடையாறு ஐ.என்.எஸ். வளாகத்துக்கு வந்த பிரதமர் அங்கிருந்து கார் மூலமாக சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சென்று வந்தேபாரத் ரெயிலை தொடங்கி வைத்தார்.
இதன்பிறகு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தை சென்றடைகிறார்.
அங்கு ராமகிருஷ்ணா மடம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர் மாலையில் பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். அங்கு பல்வேறு ரெயில்வே திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
ஒரேநாளில் சென்னையில் 4 நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பிரதமர் இன்று இரவு மைசூர் சென்று தங்குகிறார். நாளை அவர் நீலகிரி தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்று சுற்றி பார்க்கிறார். பிரதமரின் வருகையையொட்டி சென்னை மாநகர் முழுவதும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
சென்னை வரும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் விமான நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், மெரினா விவேகானந்தர் இல்லம், பல்லாவரம் மைதானம் ஆகிய 4 இடங்களிலும் தமிழக பா.ஜனதாவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி வருகையையொட்டி தமிழகத்தில் திருவிழாபோல் குதூகலம் கூடியிருப்பதாக தெரிவித்து உள்ளார். தமிழக மக்கள் மீது தனிப்பட்ட அன்பும், மரியாதையும், பாசமும் கொண்டு உள்ள பிரதமரை வரவேற்க பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
இன்று மதியம் முதலே பிரதமரை வரவேற்க பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் பிரதமர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இடங்களின் அருகே திரண்டனர்.
சென்னை விமான நிலையம் அருகில் சுமார் 25 ஆயிரம் பேர் திரண்டு பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். இதனால் அந்த இடம் திருவிழாகோலம் பூண்டிருந்தது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் தாரை தப்பட்டை முழங்க பிரதமரை வரவேற்கும் வகையில் பா.ஜனதாவினர் விண்ணதிர வாழ்த்து கோஷங்களையும் எழுப்பினார்கள்.
இதேபோன்று நேப்பியர் பாலம் அருகில் உள்ள சிவானந்தா சாலை, பல்லவன் சாலை உள்ளிட்ட இடங்களிலும் சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகிலும் வழிநெடுக திரண்ட பா.ஜனதாவினர் சாலையின் இருபுறமும் நின்று பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர்.
மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் கைகளில் பதாகைகளையும் ஏந்தி இருந்தனர். ஜி.20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்குவது உள்ளிட்ட மத்திய அரசின் சாதனைகளை விவரிக்கும் வகையில் நீளமான பதாகைகளையும் ஏந்தி இருந்தனர்.
சென்னை மாநகர் முழுவதுமே விழாக்கோலம் கொண்டு இருந்தது. பாரதிய ஜனதா கட்சியினர் மிகுந்த உற்சாகத்தோடு காணப்பட்டனர்.
சென்னை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 22 ஆயிரம் போலீசார் மாநகர் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.