என் மலர்
உள்ளூர் செய்திகள்
மதுரை ரெயில் நிலையத்தில் வடமாநில பயணி தூக்கு போட்டு தற்கொலை
- பாலத்தை தாங்கி நிற்கும் இரும்பு தூணில் வயதான ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
- ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர்.
மதுரை:
மதுரை ரெயில் நிலையத்தில் 6-வது பிளாட்பாரத்திற்கு செல்லும் நடைபாலத்தின் கீழ் பகுதியில் பாலத்தை தாங்கி நிற்கும் இரும்பு தூணில் வயதான ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதனை இன்று அதிகாலை 2 மணி அளவில் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மதுரை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர்.
அவர்கள் தூக்கில் பிணமாக தொங்கியவரின் உடலை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கீழே இறக்கி கொண்டு வந்தனர். பின்பு அந்த நபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த நபருக்கு சுமார் 50 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் அணிந்திருந்த சட்டை மற்றும் பேண்ட்டை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அதில் ஆக்ராவில் இருந்து சென்னை, சென்னையில் இருந்து மதுரை, மதுரையில் இருந்து ராமேசுவரம், ராமேசுவரத்தில் இருந்து மதுரை வந்ததற்கான ரெயில்வே டிக்கெட்டுகள் இருந்தன.
ஆக்ராவில் இருந்து வந்ததற்கான ரெயில் டிக்கெட் இருப்பதால் தற்கொலை செய்து கொண்டவர் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம்? என்று போலீசார் கருதுகின்றனர். ஆனால் அவரிடம் அடையாள அட்டை எதுவும் இல்லாததால் பெயர் மற்றும் ஊர் விவரம் எதுவும் தெரியவில்லை.
அவர் வைத்திருந்த ராமேசுவரம்-மதுைர ரெயில் டிக்கெட் நேற்று எடுத்ததாகும். இதனால் அவர் ராமேசுவரத்தில் நேற்று இரவு மதுரை ரெயில் நிலையத்திற்கு வந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகே அவர் நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் நடைபாலத்தின் கீழ் பகுதிக்கு சென்று கயிற்றில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து இருக்கிறார்.
நள்ளிரவு என்பதால் அவர் அந்த பகுதிக்கு சென்றதையோ, தூக்குப்போட்டு தற்கொலை செய்ததையோ யாரும் பார்க்கவில்லை.மேலும் அவருடன் யாரும் வந்தார்களா? என்பதை கண்டறிய ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா வீடியோ பதிவுகளை கைப்பற்றி ரெயில்வே போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
தினமும் பல ரெயில்கள் செல்வதால் மதுரை ரெயில் நிலையம் எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாகவே காணப்படும். இந்த நிலையில் வட மாநில பயணி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.