என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல் பகுதிகளில் தொடரும் மின்வெட்டு
- ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
- மின்வெட்டால் பொதுமக்கள் வீட்டுக்குள் இருக்க முடியாமல் அவதி அடைந்தனர்.
திருநின்றவூர்:
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று முன்தினம் 109 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இதனால் பெரும்பாலானவர்கள் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வருகிறார்கள். எனினும் வீட்டுக்குள் இருக்கும்போது கூட வெப்பத்தின் தாக்கம் காரணமாக புழுக்கத்தால் மக்கள் தவிக்கிறார்கள். கடந்த 3 நாட்களாக கொளத்தூர், திரு.வி.க.நகர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலைமறியல் மற்றும் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள் இருக்க முடியாமல் அவதி அடைந்தனர்.
நேற்று இரவும் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டதால் இருளில் தவித்தனர். சுமார் ஒரு மணிநேரம் முதல் 2 மணி நேரம் வரை மின்தடைக்கு பின்னர் மீண்டும் மின்வினியோகம் சீரானது.
பட்டாபிராம், மேற்கு கோபாலபுரம் பகுதியில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. மாடர்ன் சிட்டியில் நேற்று மதியம் 2 மணிக்கு தடை பட்ட மின்சாரம் இரவு 8 மணிக்கு சீரானது. இதே போல் கோபாலபுரம் பகுதியிலும் மின் வினியோகம் தடைபட்டது.
ஆவடி பகுதியில் காமராஜர் புதிய ராணுவ சாலை, தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பு உள்ளிட்ட பல இடங்களிலும் தொடர்ந்து மின்சாரம் தடைபட்டது. இன்று காலையும் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொது மக்கள் புழுக்கத்தால் தவித்தனர். திருமுல்லைவாயல் பகுதியில் தினமும் இரண்டு மணி நேரம் தொடர் மின் தடை ஏற்படுவதாக பொது மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மின்தடை தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது சரியான பதில் கூறுவதில்லை என்று ஆதங்கத்துடன் கூறினர்.
இதேபோல் திருநின்றவூர் பகுதியில் தொடர் மின்வெட்டால் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் சங்க தலைவர் சாலமன் தலைமையில் வியாபாரிகள் மின்வாரிய அதிகாரியை சந்தித்து முறையிட்டனர்.