என் மலர்
உள்ளூர் செய்திகள்
நீர்வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு- பக்கிங்காம் கால்வாயில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு
- மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் சிற்பங்கள் செதுக்கும் கற்களை போட்டு ஆக்கிரமிப்பு
- நீர்வழி தடங்களை தடுக்கும் ஆக்கிரமிப்பு பகுதிகளை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
மாமல்லபுரம்:
வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு தொடர்பாக நீர்நிலை பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை விரைவாக ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் இருந்தால் உடனடியாக அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் கோவளம் முதல் கல்பாக்கம் புதுப்பட்டினம் வரையான பக்கிங்காம் கால்வாய் கரையோர பகுதிகளில் ஆக்கிரமிப்பு ஏதும் இருக்கிறதா? வெள்ளத் தடுப்பு தேவைப்படும் பகுதிகள் உள்ளதா? கால்வாய் சீரமைப்பு தேவையா? என்பது தொடர்பாக பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் திலிப்குமார், திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகர், வருவாய் ஆய்வாளர் ரகு, கிராம நிர்வாக அதிகாரி முனிசாமி உள்ளிட்ட வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் சிற்பங்கள் செதுக்கும் கற்களை போட்டு ஆக்கிரமிப்பு செய்து வைத்திருப்பதும், வெண்புருஷம், பூஞ்சேரி, மணமை, வடக்கு மாமல்லபுரம், தேவநேரி பகுதிகளில் உள்ள சில இறால் பண்ணைகள் கால்வாய் ஆக்கிரமிப்பு பகுதியில் வருவதும் தெரிய வந்தது.
இதையடுத்து நீர்வழி தடங்களை தடுக்கும் ஆக்கிரமிப்பு பகுதிகளை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தினர்.