search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை மாவட்டத்தில் கோழி தீவனம் என்ற பெயரில் நடந்த ரேசன் அரிசி கடத்தல்
    X

    மதுரை மாவட்டத்தில் கோழி தீவனம் என்ற பெயரில் நடந்த ரேசன் அரிசி கடத்தல்

    • ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
    • மதுரை மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் 27 ஆயிரத்து 200 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் கரிசல்குளம், பனையூர், அனுப்பானடி ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் மில்களில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ரகசிய தகவல் வந்தது.

    உடனே மதுரை மண்டல ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்துவது என்று முடிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து குடிமைப்பொருள் உணவு வழங்கல் புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு சினேகப்பிரியா தலைமையில் அதிகாரிகள் பல்வேறு குழுவாகப் பிரிந்து ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது கரிசல்குளம் அரிசி ஆலையில் பதுக்கி வைத்திருந்த 8500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல பனையூர் மில்லில் 14 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அனுப்பானடி அரிசி ஆலையிலும் 4700 கிலோ ரேசன் அரிசி மூட்டைகள் சிக்கியது.

    இதனைத் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கையும் களவுமாக பிடிபட்ட பனையூர் அரிசி ஆலை உரிமையாளர் முத்து கிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மதுரை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி வாகன சோதனை நடத்தி வருகின்றனர். எனவே கோழி தீவனம் என்ற பெயரில், அரிசி கடத்தல் கும்பல் புதிய தொழிலுக்கு மாறி உள்ளது. இதன்படி அவர்கள் மாவட்டம் முழுவதிலும் ரேஷன் அரிசிகளை கடத்தி வந்து ரைஸ் மில்லில் பதுக்கி வைத்து உள்ளனர். அதன் பிறகு இந்த கும்பல் மில்லில் ரேசன் அரிசியை அரைத்து கோழி தீவனமாக மாற்றி, வெளி மாவட்டங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்தது தெரிய வந்து உள்ளது.

    பனையூர் ஆலையில் ரேஷன் அரிசியை கடத்தி வந்து கோழி தீவனமாக மாற்றும் வேலையில் முத்து கிருஷ்ணனுக்கு மதுரையைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி, செல்வம், கண்ணாயிர மூர்த்தி ஆகியோர் உடந்தையாக இருந்து உள்ளனர்.

    அரிசி ஆலை உரிமையாளர் முத்துகிருஷ்ணன் போலீசில் பிடிபட்டது தெரிய வந்ததும் மேற்கண்ட 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். இதனைத் தொடர்ந்து முத்து கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் 27 ஆயிரத்து 200 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்.

    Next Story
    ×