என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஆர்.கே.வி ரோடு முதல் பன்னீர்செல்வம் பார்க் வரை ஈரோட்டில் இன்று 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- சாலை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை காணப்பட்டு வந்தது.
- உதவி பொறியாளர் சேகர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு பணிகளை பார்வையிட்டனர்.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வழியாக சத்தி ரோடு சந்திப்பு எல்லை மாரியம்மன் கோவில் வரையிலான சாலையின் இருபுறங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது.
குறிப்பாக பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வரை சாலையின் ஒரு பகுதியில் தற்காலிகமாக ஜவுளி கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டு வந்தது. இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த சாலை வழியாக தான் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வாகனங்கள் செல்கின்றன. இதனால் இந்த சாலை முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது.
சாலை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை காணப்பட்டு வந்தது. மேலும் அப்பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி ஜவுளி வணிக வளாகம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் மேலும் அப்பகுதியில் கடுமையான நெருக்கடி ஏற்படும் என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஏராளமான புகார்கள் சென்றது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு இருந்து வந்தது. இதனை அடுத்து நேற்று நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஒன்றிணைந்து ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து எல்லை மாரியம்மன் கோவில் வரை உள்ள 300-க்கும் மேற்பட்ட அக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஈரோடு ஆர்.கே.வி ரோடு, கிருஷ்ணா தியேட்டரில் இருந்து மணிக்கூண்டு, நேதாஜி ரோடு, கச்சேரி ரோடு முதல் பன்னீர்செல்வம் பார்க் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர்.
அப்போது ஆர்.கே.வி ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டிருக்கும் போது அந்த பகுதியை சேர்ந்த கடைக்காரர்கள் ஒன்று திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆக்கிரமிப்பில் பாரபட்சம் காட்டாமல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போக செய்தனர்.
அதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. மாநகராட்சி தலைமை பொறியாளர் விஜயகுமார், நகர்நல அலுவலர் பிரகாஷ், உதவி ஆணையாளர் பாஸ்கர், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் சேகர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு பணிகளை பார்வையிட்டனர்.