என் மலர்
உள்ளூர் செய்திகள்
கொள்ளையடிக்க வந்த வீட்டில் மதுகுடித்து விட்டு படுத்து தூங்கிய கொள்ளையர்கள்
- சுற்றுலா முடிந்ததும் வீட்டிற்கு திரும்பி வந்த பிரசாத் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- கொள்ளை குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம்பாளையத்தை சேர்ந்தவர் பிரசாத்(வயது55).
இவர் கடந்த 4-ந்தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மத்தியபிரதேச மாநிலத்துக்கு சுற்றுலா சென்றார்.
அப்போது பிரசாத் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த கேமிரா, வெள்ளி நாணயம், தங்க நாணயம், வைர கம்மல், மூக்குத்தி, வெள்ளி டம்ளர் உள்பட ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்தனர்.
பின்னர் கொள்ளையர்கள் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று விஸ்கி, ஒயின் ஆகியவற்றை வாங்கி விட்டு மீண்டும் பிரசாத்தின் வீட்டிற்கு சென்றனர்.
அங்கு வைத்து அவர்கள் மது குடித்தனர். மது குடிக்கும் போது சாப்பிடுவதற்காக வீட்டில் உள்ள பிரிட்ஜை திறந்து அதில் இருந்த உணவு பொருட்களை எடுத்து சாப்பிட்டு மது குடித்தனர்.
பின்னர் போதையில் படுத்து தூங்கி விட்டு போதை தெளிந்ததும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களுடன் தப்பிச் சென்றனர்.
சுற்றுலா முடிந்ததும் வீட்டிற்கு திரும்பி வந்த பிரசாத் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. மேலும் வீட்டில் கொள்ளையர் பயன்படுத்திய மதுபாட்டில் கிடப்பதை கண்டார். இது குறித்து அவர் வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.