என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மதுரையில் போலீசுக்கு சவால்விட்ட ரவுடி 1 ஆண்டுக்கு பிறகு கைது மதுரையில் போலீசுக்கு சவால்விட்ட ரவுடி 1 ஆண்டுக்கு பிறகு கைது](https://media.maalaimalar.com/h-upload/2022/08/07/1742398-madurai.jpg)
கைதான ரவுடி ராஜேஷ்
மதுரையில் போலீசுக்கு சவால்விட்ட ரவுடி 1 ஆண்டுக்கு பிறகு கைது
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- மதுரை போலீசுக்கு சவால் விட்ட பிரபல ரவுடியை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரவுடியை பிடித்த தனிப்படை உதவி கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் போலீசாருக்கு, மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் மற்றும் துணை கமிஷனர் மோகன்ராஜ் ஆகியோர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
மதுரை:
மதுரை கோரிப்பாளையம், ஜம்பராபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த செல்வராஜ் மகன் பந்தல்குடி ராஜேஷ் (வயது 30). இவர் மீது தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உள்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பந்தல்குடி ராஜேஷ், தனிப்படை போலீஸ் ஏட்டு செந்திலை கடந்த ஆண்டு செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவர் "என் கை, கால்களை உடைக்க வேண்டும் என்று சொல்லி திரிகிறாயாமே? ஆம்பளையா இருந்தா காக்கி சட்டையை கழற்றி வைத்துவிட்டு வா, நாம் ஒத்தைக்கு ஒத்தையாக சண்டை போட்டு பார்க்கலாம். நீ எங்கே இருக்கேனு சொல். நான் வருகிறேன்" என்று மிரட்டினார்.
பந்தல்குடி ராஜேஷ்-போலீஸ் ஏட்டு செந்தில் இடையேயான ஆடியோ உரையாடல், அப்போது சமூகவலைதளத்தில் வைரலாக பரவியது.
இதனைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள பந்தல்குடி ராஜேஷை கைது செய்வதற்காக, தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிகுந்தகண்ணன், சண்முகநாதன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பந்தல்குடி ராஜேஷை கடந்த ஓராண்டு காலமாக தேடி வந்தனர். ஆனாலும் அவர் பிடிபடவில்லை.
இதற்கிடையே பந்தல்குடி ராஜேஷ் கேரளாவில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. எனவே அவரை கையும் களவுமாக கைது செய்வது என்று போலீசார் முடிவு செய்தனர்.
இந்த நிலையில் பந்தல்குடி ராஜேஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை ஜம்புராபுரம் வீட்டுக்கு வந்து இருப்பது தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. எனவே போலீசார் நேற்று இரவு ஜம்புராபுரம் வீட்டுக்கு சென்றனர். அப்போது பந்தல்குடி ராஜேஷ் வீட்டுக்கு அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும், பந்தல்குடி ராஜேஷ் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், "எனக்கு நரம்பு நோய் பிரச்சனை உள்ளது. இதற்காக கேரளாவுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தேன். அந்த நோய் குணமாக ஓராண்டு காலம் பிடித்தது. அதன் பிறகு நான் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை திரும்பினேன்.
இங்கு வந்த பிறகு தான் போலீசார் என்னை தேடுவது தெரிய வந்தது. நான் தனிப்படை போலீஸ் ஏட்டு செந்திலிடம் மிரட்டலாக பேசியது தவறு தான். என்னை மன்னித்து விடுங்கள்" என்று கெஞ்சி உள்ளார்.
பந்தல்குடி ராஜேஷ் மீது கொலை முயற்சி உள்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே அவரிடம் இது தொடர்பாக போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை போலீசுக்கு சவால் விட்ட பிரபல ரவுடியை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரவுடியை பிடித்த தனிப்படை உதவி கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் போலீசாருக்கு, மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் மற்றும் துணை கமிஷனர் மோகன்ராஜ் ஆகியோர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.