என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் நடந்த ரவுடியின் ஆடம்பர திருமண வரவேற்பு போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் நடந்த ரவுடியின் ஆடம்பர திருமண வரவேற்பு](https://media.maalaimalar.com/h-upload/2022/09/13/1761201-1275262-1mamallapuram.jpg)
கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் தடுப்பு அமைத்து வாகன சோதனை நடத்திய காட்சி.
போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் நடந்த ரவுடியின் ஆடம்பர திருமண வரவேற்பு
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- மண்டப வளாகத்தின் உள்ளே பத்திரிக்கையுடன் நுழையும் அனைவரையும் போலீசார் விசாரித்த பின்னரே உள்ளே அனுப்பினர்.
- தலைமறைவு ரவுடிகளின் புகைப்படத்தை வைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மாமல்லபுரம்:
தாம்பரம் அருகே உள்ள நடுவீரபட்டு பகுதியை சேர்ந்தவர் நரேஷ்பாபு. ரவுடியான இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும் கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள லீலாவதி அரங்கத்தில் ஆடம்பரமாக திருமண வரவேற்பு நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
நரேஷ் மற்றும் அவரது அண்ணனுக்கும் அவர்களிடம் கூட்டாளியாக இருந்து தற்போது எதிரியாக உள்ள எதிர்தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது.
இதில் எதிர்தரப்பை சேர்ந்த ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக திருமண நாள் அன்று நரேஷ்பாபுவை கொலை செய்ய எதிர்தரப்பினர் அரிவாள், கத்தி, போன்ற ஆயுதங்களுடன் மாறுவேடத்தில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனால் திருமண வரவேற்பின் போது ரவுடிகளுக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மோதலை தடுக்கும் வகையில் நரேஷ்பாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மண்டபத்திலும், அங்குள்ள அறைகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மண்டப வளாகத்தின் உள்ளே பத்திரிக்கையுடன் நுழையும் அனைவரையும் போலீசார் விசாரித்த பின்னரே உள்ளே அனுப்பினர்.
இதேபோல் தலைமறைவு ரவுடிகளின் புகைப்படத்தை வைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் வந்த அனைத்து வாகனங்களையும் தடுப்புகள் அமைத்து நிறுத்தி சோதனை செய்த பின்னரே அனுமதித்தனர்.
இரவு 7 மணி அளவில் மணமக்கள் சொகுசு ஜாகுவார் காரில் பாதுகாப்புடன் வந்து இறங்கினர். இதைத்தொடர்ந்து போலீசாரின் அறிவுறுத்தலால் அவசர அவசரமாக வரவேற்பு, ஆடம்பர விருந்துகள் இரவு 10மணிக்குள் முடிக்கப்பட்டது.
திருமண வரவேற்பில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காததால் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.