என் மலர்
உள்ளூர் செய்திகள்

சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.46 லட்சம் மதிப்புள்ள 846 கிராம் தங்கம் பறிமுதல்

- ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.
- பயணி தனது உடலில் பேஸ்ட் வடிவில் ரூ.46.37 லட்சம் மதிப்பிலான 846 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது நவீன ஸ்கேனர் கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னை, பெங்களூர், ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவையும் அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவர்கள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்வதும் வாடிக்கையாகி விட்டது.
அந்த வகையில் கடந்த வாரம் ரூ.8 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் ஒரு பயணியிடமும், ரூ.41.65 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் மற்றொரு பயணியிடமும் என மொத்தமாக ரூ.49.65 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு சார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது அவர் தனது உடலில் பேஸ்ட் வடிவில் ரூ.46.37 லட்சம் மதிப்பிலான 846 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது நவீன ஸ்கேனர் கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தவிர வியாபாரிகளாக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள், குருவிகள் என பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.