என் மலர்
உள்ளூர் செய்திகள்

செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை ஏன்?- ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு
- திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
- பல்வேறு சோதனைகளை பார்த்து பழக்கப்பட்டவர்கள் திமுகவினர்.
சென்னை:
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை காலை முதல் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் உள்ளிட்ட நிர்வாகிகள் செந்தில் பாலாஜி இல்லத்திற்கு வருகை தந்தனர்.
செந்தில் பாலாஜி இல்லத்தின் முன் காத்திருந்த தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. பல்வேறு சோதனைகளை பார்த்து பழக்கப்பட்டவர்கள் திமுகவினர். ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
மனித உரிமையை மீறும் வகையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜியின் நிலை குறித்து அறிய விரும்பினோம். ஆனால், அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை. அதிமுக- பாஜக இடையே ஏற்பட்டுள்ள மோதலை திசை திருப்பும் வகையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.
தலைமைச் செயலாளரிடம் அனுமதி பெறாமலேயே தலைமைச் செயலகத்தில் அத்துமீறி சோதனை நடைபெறுகிறது.
கர்நாடகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது ஆனால் அங்கு காங்கிரஸ் தான் வென்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.