என் மலர்
உள்ளூர் செய்திகள்
அணை பகுதியில் தொடர்மழை- சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு
- மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
- இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 32 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நெல்லை அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 75.55 அடியாக உள்ளது. அணை பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 77.62 அடியாக இருந்தது. தொடர்மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் இன்று காலை 82.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 965 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 87.45 அடி நீர் இருப்பு உள்ளது.
மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 32 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கண்ணடியன் கால்வாய் பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை கொட்டியது.
களக்காடு, சேரன்மகாதேவி, நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி, அம்பை, ராதாபுரம், நம்பியாறு அணை பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
தொடர்மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை தொடர்கிறது.
களக்காடு தலையணையில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் நேற்று முதல் ஓரமாக நின்று குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.