என் மலர்
உள்ளூர் செய்திகள்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
- கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வதும், அவர்களது விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் இலங்கை கடற்படையினரின் வாடிக்கையான செயலாக இருக்கிறது.
- கச்சத்தீவு அருகே நேற்று மீன்பிடித்து கொண்டிருந்த எங்களை எல்லை தாண்டி வந்திருப்பதாக கூறி திரும்பி செல்லுமாறு எச்சரித்தனர்.
ராமேசுவரம்:
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி, அவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் கச்சத்தீவு பிரச்சினையில் தீர்வு காண மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 300-க்கும் மேற்பட்ட சிறிய விசைப்படகுகளில் சுமார் 1,500 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் வழக்கம்போல் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்து கொண்டிருப்பதாக கூறி அங்கிருந்து திரும்பி செல்லுமாறு ராமேசுவரம் மீனவர்களை எச்சரித்துள்ளனர். மேலும் அவர்களது படகில் இருந்த வலைகளை வெட்டி சேதப்படுத்தி விரட்டியடித்துள்ளனர்.
இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் அனைவரும் மீன்பிடிக்காமல் கரைக்கு திரும்பி வந்தனர். இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூறியதாவது:-
கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வதும், அவர்களது விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் இலங்கை கடற்படையினரின் வாடிக்கையான செயலாக இருக்கிறது. நேற்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த எங்களை எல்லை தாண்டி வந்திருப்பதாக கூறி திரும்பி செல்லுமாறு எச்சரித்தனர்.
மேலும் 10-க்கும் மேற்பட்ட படகில் இருந்த வலைகளை வெட்டி சேதப்படுத்தினர். இதனால் எங்களுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தினமும் கடலுக்கு அச்சத்துடனே செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தொடராமல் இருக்க மத்திய-மாநில அரசுகள் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.