என் மலர்
உள்ளூர் செய்திகள்
குடுகுடுப்பை பிரிவை சேர்ந்தவர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு பின் சாதி சான்றிதழ்
- கடந்த ஆண்டு குடுகுடுப்பை மூலம் குறிசொல்லும் அந்த மக்களுக்கு சான்று வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- கடந்த சில நாள்களுக்கு முன்பு 25 பேருக்கு சான்றளிக்க அனுமதிக்கப்பட்டது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் நகரில் வ.உ.சி. தெருப் பகுதியில் குறிசொல்லும் குடுகுடுப்பைப் பிரிவைச் சோ்ந்த சுமாா் 34 குடும்பங்கள் வசித்துவருகின்றன. அவா்கள் பல தலை முறைகளாக ராமநாதபுரத்தில் வசித்துவரும் நிலையில் சாதிச்சான்றுகள் வழங்கப்படவில்லை. இதனால், அவா்களது குழந்தைகள் கல்வி கற்க இயலாத நிலை ஏற்பட்டது. மேலும் சாதிச்சான்று இல்லாமல் அரசு நலத்திட்ட உதவிகளை பெறமுடியாமலும் இருந்தனா்.
வீடு, வீடாகச் சென்று குறிசொல்லி பிழைப்பு நடத்திய அப்பிரிவினா் காலமாற்றத்தால் வேறு தொழில்களுக்கு செல்ல முயன்றாலும் சாதிச்சான்று, கல்வி கற்க இல்லாத நிலையில் அவதியடைந்து வந்தனா். ஆகவே தங்களுக்கு கணிக்கா் என சான்று வழங்கக் கோரி கடந்த 30 ஆண்டுகளாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களை அளித்து வந்தனா். அவ்வப்போது போராட்டங்களையும் நடத்தினா்.
இந்நிலையில், கடந்த ஆண்டு குடுகுடுப்பை மூலம் குறிசொல்லும் அந்த மக்களுக்கு சான்று வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு 25 பேருக்கு சான்றளிக்க அனுமதிக்கப்பட்டது.
இதையடுத்து அப்பிரிவைச் சோ்ந்த 40 குழந்தைகளுக்கு இந்து கணிக்கா் என்ற சாதிச்சான்றை ராமநாதபுரம் கோட்டாட்சியா் சேக்மன்சூா் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், ராமநாதபுரம் நகா் வருவாய் வட்டாட்சியா் முருகேசன், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் வீரசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.