என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருப்போரூர், பல்லாவரத்தில் புதிதாக 2 கோர்ட்டுகள் திறப்பு- ஐகோர்ட்டு நீதிபதி தொடங்கி வைத்தார்
- திருப்போரூர் மற்றும் பல்லாவரம் ஆகிய பகுதிகளில் 2 புதிய கோர்ட்டுகளை சேர்த்து மொத்தம் 45 நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- அரசு இடத்தில் புதிய கட்டிடம் கட்ட நீதித்துறை சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு வருவாய் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் வருவாய் மாவட்டம் இணைந்து திருப்போரூர் மற்றும் பல்லாவரம் ஆகிய பகுதிகளில் புதிய கோர்ட்டுகள் திறப்பு விழா செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இதில் சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு நீதிபதி டி.ராஜா புதிதாக செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில் திருப்போரூர் மற்றும் பல்லாவரம் ஆகிய 2 இடங்களில் புதிய கோர்ட்டுகளை திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
தற்போது 43 நீதிமன்றங்கள் இயங்கி வருகிறது. திருப்போரூர் மற்றும் பல்லாவரம் ஆகிய பகுதிகளில் 2 புதிய கோர்ட்டுகளை சேர்த்து மொத்தம் 45 நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய நீதி மன்றம் அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் ஒருசில நாட்களில் இயங்க உள்ளது. வழக்காட வருபவர்களின் தொலைவு மற்றும் அவர்களின் சிரமத்தை போக்குகின்ற வகையில் நீதித்துறையும் அரசும் இணைந்து புதிய நீதிமன்றங்களை திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
திருப்போரூர் பகுதியில் இருந்து செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வரும் 1040 சிவில் மற்றும் குற்ற வழக்குகள் திருப்போரூர் நீதிமன்றத்திற்கு உடனடியாக மாற்றம் செய்யப்படுகிறது. ஆலந்தூர் நீதிமன்றத்தில் இருந்து 1264-சிவில் மற்றும் குற்ற வழக்குகள் மற்றும் தாம்பரம் நீதி மன்றத்தில் இருந்து 1204-சிவில் மற்றும் குற்ற வழக்குகள் என மொத்தம் 2468-வழக்குகள் புதிதாக தொடங்க உள்ள பல்லாவரம் நீதிமன்றத்திற்கு மாற்றலாகி நீதி மன்ற பணிகள் விரைவாக தொடங்கப்படும்.
உத்திரமேரூரில் இயங்கி வரும் நீதிமன்றம் தனியார் கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது அரசு இடத்தில் புதிய கட்டிடம் கட்ட நீதித்துறை சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உடனடியாக புதிய நீதிமன்றம் கட்டிட பணிகளை அரசு தொடங்க உள்ளது. ஆலந்தூர் நீதிமன்றத்திற்கு மேலும் புதிய கட்டிடங்கள் கட்ட தமிழக அரசு திட்டங்கள் தீட்டி வருகிறது.புதிதாக மேலும் மூன்று நீதிமன்றங்கள் திறக்கவும் நீதித்துறை சார்பில் முடிவு செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வருவாய் மாவட்டம் குன்றத்தூர், செங்கல்பட்டு வருவாய் மாவட்டம் சோழிங்கநல்லூர் மற்றும் வண்டலூர் ஆகிய இடங்களில் புதிய நீதிமன்றங்களை தொடங்க நீதித்துறையும், தமிழ்நாடு அரசும் இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி, மாவட்ட நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா, கலெக்டர் ராகுல்நாத், போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் பங்கேற்றனர்.