என் மலர்
உள்ளூர் செய்திகள்
கால்வாயை ஆக்கிரமித்து கட்ட முயன்ற கட்டிடம் இடிப்பு- பொதுமக்கள் போராட்டம்
- நீர்வழிப் பாதையை தடுக்கும் விதமாக கட்டிடம் கட்டப்படுவதும் தெரிய வந்தது.
- பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்க சென்றனர்.
நெல்லை:
நெல்லை-தென்காசி நெடுஞ்சாலையில் பழைய பேட்டையை அடுத்த கண்டியப்பேரி பகுதியில் ஊய்காட்டு சுடலை மாடசாமி கோவில் இருக்கிறது.
கோடகன் கால்வாய் கரையில் அமைந்துள்ள இந்த கோவிலின் பின்புறமாக தற்போது அந்த பகுதி மக்கள் கோவிலுக்கு சுற்றுச்சுவர் எழுப்ப முடிவு செய்து அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக கான்கிரீட் போடப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கால்வாயை ஆக்கிரமித்து கட்டுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது. இந்த இடத்தில் பொதுப்பணி துறையினரும், வருவாய்த்துறையினரும் இணைந்து அப்பகுதியில் சென்று ஆய்வு நடத்திய நிலையில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த இடத்தை அளவீடு செய்ய முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்த நிலையில் அளவீடு செய்ததில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதும், நீர்வழிப் பாதையை தடுக்கும் விதமாக கட்டிடம் கட்டப்படுவதும் தெரிய வந்தது.
இதையடுத்து இன்று டவுன் தாசில்தார் விஜய லட்சுமி முன்னிலையில் கட்டப்பட்டிருந்த கான்கிரீட்டுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் இருந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்ததால் சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்க சென்றனர். அங்கு அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.