search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருத்தூதர் யூதா ததேயு திருத்தேர் பெருவிழா: ஏராளமானோர் வழிபாடு - இன்று மாலை கொடியிறக்கத்துடன் நிறைவு

    • இந்த ஆண்டு விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று மாலை வெகு விமரிசையாக நடந்தது.
    • முன்னதாக திருப்பலியும், ஜெபமாலை நவநாள் திருப்பலியும் நடந்தது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் உற்சாக கோஷத்துடன் தேர் திருவிழா நடந்தது.

    சென்னை:

    சென்னையை அடுத்த வாணுவம்பேட்டையில் உள்ள யூதா ததேயு திருத்தலத்தின் திருத்தேர் பெருவிழா நேற்று நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இயேசுவின் சீடர்களில் முக்கியமானவரும், முதன்மையானவருமான யூதா ததேயுவுக்கு சென்னையை அடுத்த வாணுவம்பேட்டையில் தனி திருத்தலம் நிறுவப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் திருத்தலத்தின் ஆண்டு விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு விழாவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்பார்கள். மனதில் நினைத்த வேண்டுதல்களை விரைவில் நிறைவேற்றித் தரவல்ல திருத்தலமான இங்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் பங்கேற்று வழிபட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் யூதா ததேயு திருத்தலத்தில் 45-வது ஆண்டு விழா, கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2-ம் நாளை நற்கருணை பெருவிழா நடந்தது.

    இந்த ஆண்டு விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று மாலை வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக திருப்பலியும், ஜெபமாலை நவநாள் திருப்பலியும் நடந்தது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் உற்சாக கோஷத்துடன் தேர் திருவிழா நடந்தது. இதில் செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் நீதிநாதன் தலைமை தாங்கினார். இதனால் வாணுவம்பேட்டையே நேற்று உற்சாக கோலம் பூண்டது. பக்தர்கள் மனமுருக இறைவனை வழிபட்டனர். பலர் தங்களது வேண்டுதல்களையும் நிறைவேற்றி சென்றனர்.

    இறுதி நாளான இன்று திருத்தூதர் பெருவிழா மற்றும் கொடியிறக்க நிகழ்வு நடைபெறுகிறது. காலை திருப்பலி நிகழ்வு அரங்கேறியது. தாமஸ் அகாடமியின் இயக்குனர் தந்ததை சி.பால்ராஜ் ஆங்கிலத்தில் திருப்பலியை முன்னெடுக்கிறார். மாலை ஜெபமாலை, நவநாள், திருவிழா திருப்பலி அதனைத் தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது. செங்கல்பட்டு மறை மாவட்டத்தைச் சேர்ந்த மேய்ப்பு பணி மைய இயக்குனர் அருட்பணி இயேசு அந்தோணி தலைமை தாங்குகிறார்.

    விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருத்தலத்தின் அதிபர் தந்தை ஏ.மார்ட்டின் ஜோசப் மற்றும் உதவி பங்கு தந்தை ஜான் ராபர்ட் ஆகியோர் முன்னின்று நடத்தி வருகிறார்கள்.

    4 நாட்கள் நடந்த இந்த கோலாகலமான திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×