என் மலர்
உள்ளூர் செய்திகள்
அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து விசாரணை கைதிகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 7 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
- கைதிகள் 2 பேரும் பொது வார்டில் அனுமதிக்கப்பட்டதால் போலீசார் தாக்குதல் நடத்திய கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
- தனி வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தால் போலீசார் துப்பாக்கியால் சுட்டு மர்ம கும்பலை பிடித்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
விருதுநகர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டி அபிராமி நகரை சேர்ந்தவர் யுவராஜ் என்ற யுவராஜ்குமார் (வயது29), இவரது நண்பர் குணா. இவர் விறகு வெட்டும் தொழில் செய்து வந்தார். குணாவுக்கும், சின்னதம்பி என்பவருக்கும் சம்பள பாக்கி தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சின்னதம்பி, அவரது தம்பி பரமசிவன் என்ற குட்டி ஆகியோர் கடந்த ஆண்டு குணாவை வெட்டி கொலை செய்தனர். இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 1-ந்தேதி யுவராஜ்குமார், விக்னேஷ்குமார் ஆகிய 2 பேரையும் சின்னதம்பி அவரது சகோதரர் விஜி மற்றும் ராமசந்திரன் ஆகியோர் தாக்கினர். இதற்கு பழிவாங்கும் வகையில் மார்ச் 2-ந்தேதி யுவராஜ், விக்னேஷ்குமார் மற்றும் குணா குடும்பத்தினர் சின்னதம்பியை வெட்டிக் கொலை செய்தனர்.
அப்போது ஏற்பட்ட மோதலில் யுவராஜ்குமார், விக்னேஷ்குமார் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் கடந்த 6-ந் தேதி கைது செய்யப்பட்டு விருதுநகர் மாவட்ட ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்கள் காயமடைந்து இருந்ததால் மார்ச் 22-ந் தேதி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் 4-வது தளத்தில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக திண்டுக்கல் ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் பால் செல்வம் தலைமையில் 3 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று இரவு போலீஸ்காரர்கள் சிலம்பரசன், அழகுராஜ் ஆகியோர் பணியில் இருந்தனர். இந்த நிலையில் இரவு 7 மணியளவில் திண்டுக்கலை சேர்ந்த போத்திராஜன், நாட்டு ராயன், அருண், விஜி, ராமசந்திரன், சோனையன் என்ற செல்வம் மற்றும் ஒருவர் உள்பட 7 பேர் அரிவாள், வாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் கைதிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு வந்தனர்.
அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 2 போலீசார் மற்றும் கைதிகள் மீது மிளகாய் பொடித்தூடி தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இந்த சம்பவத்தில் கைதி யுவராஜ்குமார், போலீஸ்காரர் சிலம்பரசன் ஆகியோர் காயமடைந்தனர்.
அப்போது போலீஸ்காரர் சிலம்பரசன் துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று மிரட்டியதால் தாக்குதல் நடத்திய 7 பேரும் தப்பி சென்றுவிட்டனர். இதுபற்றி விருதுநகர் கிழக்கு போலீசில் கைதி யுவராஜ்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், தாக்குதல் நடத்திய 7 பேர் மீதும் கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், டி.எஸ்.பி. அர்ச்சனா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கைதிகள் மற்றும் போலீசாரிடம் விசாரணை நடத்தினர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 7 பேர் சின்ன தம்பியின் உறவினர்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் பாண்டியன்நகர் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, வச்சகாரப்பட்டி இன்ஸ்பெக்டர் ராம்தாஸ், கிருஷ்ணன் கோவில் இன்ஸ்பெக்டர் முத்துகுமார், திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் தாக்குதல் நடத்திய 7 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.
கைதிகள் 2 பேரும் பொது வார்டில் அனுமதிக்கப்பட்டதால் போலீசார் தாக்குதல் நடத்திய கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தால் போலீசார் துப்பாக்கியால் சுட்டு மர்ம கும்பலை பிடித்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி கூறுகையில், இன்று மாலைக்குள் மர்ம கும்பலை சேர்ந்த 7 பேரை பிடித்து விடுவோம் என்று தெரிவித்தார்.