search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெடி விபத்தில் பெண் பலி: பட்டாசு ஆலை உரிமையாளர்- கணவர் கைது
    X

    கைது செய்யப்பட்ட கோசலை-சேகர்.

    வெடி விபத்தில் பெண் பலி: பட்டாசு ஆலை உரிமையாளர்- கணவர் கைது

    • பட்டாசு குடோன் அனுமதியின்றி செயல்பட்டதா? என்று அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்தனர்.
    • பட்டாசு குடோன் வெடித்து பெண் பலியான சம்பவம் தொடர்பாக குடோன் உரிமையாளர் கோசலை, அவரது கணவர் சேகர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர்:

    புதுவை மாநிலம் அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கோசலை (வயது 50). இவர் கடலூர் அருகே ரெட்டிச்சாவடி சிவனார்புரத்தில் பட்டாசு குடோன் வைத்து நடத்தி வருகிறார். இங்கு நாட்டு வெடி, வாணவெடி உள்ளிட்ட வெடிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடலூர், புதுவை மாநில கடற்கரையோரங்களில் மாசிமக திருவிழா இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    இந்த மாசிமகத்தில் கடற்கரையில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடக்கும். இரவு தெப்ப உற்சவமும் நடக்கும். அப்போது நாட்டு வெடி, வாணவெடிகள் வெடிப்பது வழக்கம்.

    இந்த திருவிழாவுக்காக நாட்டு வெடிகளை ஆர்டரின் பேரில், அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக தயார் செய்து வந்தனர். அதன்படி நேற்றும் பட்டாசு தயாரிக்கும் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது மாலை 4.15 மணி அளவில் திடீரென குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. பட்டாசுகள் ஒவ்வொன்றாக வெடித்ததால் குடோன் தரைமட்டமானது. இருப்பினும் வெடிகள் ஆங்காங்கே வெடித்த வண்ணம் இருந்தது. குடோனும் பற்றி எரிந்தது.

    வெடிகுண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டதால், அப்பகுதி மக்கள் குடோன் இருந்த பகுதிக்கு ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்ததோடு, அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் பலத்த தீக்காயங்களுடன் வெளியே ஓடி வந்தனர். சிலர் பட்டாசு வெடித்ததில் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் கிடந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

    பின்னர் இது பற்றி கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அப்போது அரியாங்குப்பம் மணவெளி பூபாலன் மனைவி மல்லிகா (60) சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியானார்.

    அரியாங்குப்பம் மதன் மனைவி மேகலா (34), காசான் திட்டு ராஜ்குமார் மனைவி மலர்கொடி (35), சிவனார்புரம் சங்கர் மகன் சக்திதாசன் (25), பட்டாசு குடோன் உரிமையாளர் கோசலை, புதுவை அரியாங்குப்பம் ஓடெவளியை சேர்ந்த அய்யனார் மனைவி சுமதி (39), சிவனார்புரம் இளங்கோவன் மனைவி பிருந்தாதேவி (35), பாக்கம் கூட்டு ரோடு ராஜேந்திரன் மனைவி அம்பிகா (18), காசான்திட்டு செல்வம் மகள் செவ்வந்தி (19), லட்சுமி (25) ஆகிய 9 பேர் படுகாயமடைந்தனர்.

    இதற்கிடையில் இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர், ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து படுகாயமடைந்த பிருந்தாதேவி, செவ்வந்தி, லட்சுமி, அம்பிகா, சுமதி ஆகிய 5 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியிலும், மலர் கொடி, சக்திதாசன், மேகலா, கோசலை ஆகிய 4 பேரும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து கடலூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த பட்டாசு குடோன் அனுமதியின்றி செயல்பட்டதா? என்று அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது வருகிற 31-ந் தேதி வரை அனுமதி பெற்றிருப்பது தெரிய வந்தது.

    பட்டாசு குடோன் வெடித்து பெண் பலியான சம்பவம் தொடர்பாக குடோன் உரிமையாளர் கோசலை, அவரது கணவர் சேகர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×