search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெருநாய்கள் கடித்ததால் பலி: வளர்ப்பு நாய்க்கு இறுதிச்சடங்கு செய்த குடும்பத்தினர்
    X

    தெருநாய்கள் கடித்ததால் பலி: வளர்ப்பு நாய்க்கு இறுதிச்சடங்கு செய்த குடும்பத்தினர்

    • உடலில் விஷம் கலந்ததால் உடலுறுப்புகள் செயல் இழந்து விட்டதாகவும், உயிர் பிழைப்பது கடினம் என தெரிவித்தனர்.
    • உயிரிழந்த நாய்க்கு மாலை அணிவித்தும், வீட்டில் விளக்கு ஏற்றிவைத்தும் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியை சேர்ந்தவர் அருள்வேல். காய்கறி வியாபாரி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    அருள்வேல் தனது வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக ஆண் நாய்க்குட்டி ஷேடோ ஒன்றை பாசத்துடன் வளர்த்து வந்தார். இந்த நாய் பின்னாளில் அவரது குடும்பத்தில் ஒருவராகவே மாறி விட்டது.

    இந்த நிலையில் ஷேடோ நேற்று வீட்டில் இருந்து வெளியே வந்தது. அப்போது தெருவில் சுற்றி திரிந்த நாய்கள் கடித்து குதறின. இதில் ஷேடோவுக்கு படுகாயம் ஏற்பட்டது.

    தொடர்ந்து அருள்வேல் குடும்பத்தினர் நாயை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நாயை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் உடலில் விஷம் கலந்ததால் உடலுறுப்புகள் செயல் இழந்து விட்டதாகவும், உயிர் பிழைப்பது கடினம் என தெரிவித்தனர்.

    தொடர்ந்து அருள்வேல் குடும்பத்தினர் கண்ணீருடன் ஷேடோ நாயை வீட்டுக்கு கொண்டுவந்து பராமரித்து வந்தனர். இந்த நிலையில் அந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது.

    வாழ்வில் பிரிக்க முடியாத பிணைப்பாக மாறிய ஷேடோ நாய்க்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அதன் மேல் உள்ள பாசத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், வீட்டில் ஒருவர் மரணித்தால் என்ன ஈம காரியங்கள் செய்வோமோ அதேபோல இறுதி சடங்குகள் செய்வதென அருள்வேல் குடும்பத்தினர் முடிவுசெய்தனர்.

    தொடர்ந்து உயிரிழந்த நாய்க்கு மாலை அணிவித்தும், வீட்டில் விளக்கு ஏற்றிவைத்தும் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.

    பின்னர் இன்று காலை அந்த நாய் அலங்கரிக்கப்பட்ட காரில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அங்குள்ள சுடுகாட்டில் வளர்ப்பு நாய் ஷேடோ அடக்கம் செய்யப்பட்டது.

    Next Story
    ×