என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தைப்பூசத்திருவிழா: பழனியில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல் தைப்பூசத்திருவிழா: பழனியில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/11/9189158-newproject28.webp)
தைப்பூசத்திருவிழா: பழனியில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg)
- தைப்பூசத்திருவிழா தேரோட்டம் மாலை நடைபெறுகிறது.
- பக்தர்கள் குவிந்ததால் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு ஏற்பட்டது.
பழனி:
பழனியில் இன்று தைப்பூசத்திருவிழா தேரோட்டம் மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கடந்த 3 நாட்களாக அதிக அளவில் வந்தவண்ணம் உள்ளனர்.
எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் 3 நாட்களுக்கு இலவச தரிசனம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பழனி நகரில் 3 நாட்களுக்கு இலவச பஸ் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் தைப்பூசத்தை முன்னிட்டு திண்டுக்கல்-கோவை, பழனி-மதுரை இடையே சிறப்பு ரெயில் சேவையும் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் பாதயாத்திரை பக்தர்கள் மட்டுமின்றி அரசு, தனியார் பஸ்கள் மூலமாகவும், சொந்த வாகனங்கள் மூலமாகவும், ரெயில்கள் மூலமாகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர்.
இன்று மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் பழனியில் திரண்டதால் நகரமே திக்குமுக்காடியது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் வெயிலில் காத்துக்கிடந்தனர்.
இதனால் கைக்குழந்தைகள் உள்பட பலருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்து மருத்துவ முகாம் நடைபெறும் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். கூட்டத்தில் சிக்கியவர்களை ஒழுங்குபடுத்துவதிலும், தாமதம் ஏற்பட்டது.
பக்தர்களை கயிறு கட்டி ஒவ்வொரு இடமாக நிறுத்தி தரிசனத்துக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பலர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
பழனிக்கு வருகை தரும் பக்தர்கள் இங்கு கிடைக்கும் முக்கிய பிரசாதமாக பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்வது வழக்கம். அவர்களுக்காக ரூ.20, ரூ.35, ரூ.45 ஆகிய 3 விலைகளில் பஞ்சாமிர்த டப்பாக்கள் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 2 நாட்களில் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பலருக்கு பஞ்சாமிர்தம் கிடைக்கவில்லை. இதனால் மலைக்கோவில் தேவஸ்தானம், பிரசாத ஸ்டால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுகிறதா? என பக்தர்கள் தேடி அலையும் நிலை ஏற்பட்டது.
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து நேற்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், மாவட்ட எஸ்.பி.யுடன் ஆய்வு செய்த நிலையில் இன்று தென்மண்டல ஐ.ஜி. பிரேம் தலைமையிலான குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர்.
கட்டுக்கடங்காத கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் திணறும் நிலையே ஏற்பட்டது.
பழனியில் தைப்பூசத் திருவிழாவுக்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு தனியாருக்கு சொந்தமான இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இங்கு கியாஸ் சிலிண்டரில் தீ பற்றியதில் தீ மளமளவென பரவி அருகில் இருந்த ஓட்டல் கடைகளுக்கும் பரவியது.
தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் கணேசன் தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்று தீயை போராடி அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த இடத்தில் இந்த தீ விபத்து நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.