search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் கடற்கரையில் காணப்படும் பழங்காலத்து கல் சாலை?
    X

    திருச்செந்தூர் கடற்கரையில் காணப்படும் பழங்காலத்து கல் சாலை?

    • பவுர்ணமி நாட்களில் கோவில் கடற்கரையில் இரவில் குடும்பத்தோடு தங்கி வழிபாடு செய்வார்கள்.
    • திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆச்சரியமாக பார்த்து அதன் மீது நின்று “செல்பி” எடுத்து மகிழ்கின்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வார்கள்.

    மேலும் பவுர்ணமி நாட்களில் கோவில் கடற்கரையில் இரவில் குடும்பத்தோடு தங்கி வழிபாடு செய்வார்கள்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் திடீரென உள்வாங்குவதும், வெளியே சீற்றம் அதிகமாக காணப்பட்டும் வருகிறது.

    கடந்த 31-ந்தேதி அமாவாசையாக இருந்ததால் 2 நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு இந்த கடலில் அரிப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் இருப்புபாதை, வினோதம் பாலம் போன்ற கல்சாலைகள் போன்ற அமைப்பு காணப்படுகிறது. அந்த சாலை நீண்ட தூரத்திற்கு காணப்படுகிறது.

    இதுகுறித்து அப்பகுதியினர் கூறும்போது, இது பண்டைய கால மன்னர்கள் ஆட்சி செய்தபோது திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினத்தில் உள்ள துறைமுகத்திற்கு பொருட்கள் ஏற்றிச் செல்ல பயன்படுத்திய சாலை அல்லது ஆங்கிலேயர் காலத்தில் கடற்கரை வழியாக போடப்பட்ட ரெயில் இருப்புபாதையாக இருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

    இதற்கிடையே மதுரைக்கு தெற்கே பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த போது குலசேகரபட்டிணம் ஒரு துறைமுகமாக இருந்து இங்கிருந்து ஜாவா, சுமத்திரா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு முத்து, உப்பு, போன்றவை ஏற்றுமதி செய்ய கப்பல் போக்குவரத்து இருந்துள்ளதாக இந்த பகுதியில் உள்ள கோவில் கல்வெட்டு மூலம் தெரிகிறது.

    அதே போல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குலசேகரன்பட்டினத்தில் துறைமுகம் இருந்ததாகவும், இந்த துறைமுகத்திற்கு திருச்செந்தூர் கடற்கரை வழியாக ரெயில் பாதை இருந்ததாகவும் அங்கு சீனி ஆலைகள் இருந்ததாகவும் ரெயிலில் பொருட்களை ஏற்றி வந்து கப்பல் வழியாக ஏற்றுமதி நடந்துள்ளது என கூறப்படுகிறது.

    பின்னாளில் கடல் சீற்றம் ஏற்பட்டு ரெயில் போக்குவரத்து, துறைமுகம் காணாமல் போயிருக்கலாம் என தெரிகிறது.

    அதற்கான தடயங்கள் தான் தற்போது கடல் உள்வாங்கிய போது கடற்கரை வழியாக குலசேகரன்பட்டினந்திற்கு ரெயில் பாதை அல்லது சாலையாக இருந்த அடையாளம் அதாவது சாலை போன்று காணப்படுகிறது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில் இந்த வினோத பாதையை திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆச்சரியமாக பார்த்து அதன் மீது நின்று "செல்பி" எடுத்து மகிழ்கின்றனர்.

    Next Story
    ×