என் மலர்
உள்ளூர் செய்திகள்
கரகாட்டக்காரன் பட பாணியில் அரசு பஸ்சின் முன்பக்க டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு
- டயர் கழன்று ஓடி அருகில் உள்ள கால்வாயில் விழுந்தது.
- டிரைவர் சாமர்த்தியமாக நிறுத்தியதால் 30 பேர் உயிர் பிழைத்தனர்.
பழனி:
கரகாட்டக்காரன் படத்தில் நடிகர் ராமராஜன் தனது குழுவினருடன் காரில் செல்லும்போது ஒரு டயர் முன்பாக உருண்டு செல்லும். அப்போது நமது கார் முன்பாக சிறுவன் டயர் ஓட்டி விளையாடுகிறான் என அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள். அப்போது காரின் சக்கரம்தான் கழன்று ஓடுகிறது என பின்னால் தெரியவரும். தற்போது அதேபோன்ற ஒரு சம்பவம் பழனியில் இன்று நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து 80க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று காலை 10.15 மணியளவில் பழனி பஸ் நிலையத்திலிருந்து தீர்த்த கவுண்டர் வலசு கிராமத்திற்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சை பாண்டி என்பவர் ஓட்டிச் சென்றார். சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் அரசு பஸ் அமர பூண்டி என்ற இடத்திற்கு அருகே சென்றபோது முன்பக்க சக்கரம் கழன்று பேருந்துக்கு முன்பாக ஓடியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தினார்.
தொடர்ந்து கழன்று ஓடிய சக்கரம் சாக்கடை கால்வாயில் விழுந்தது. சக்கரம் கழன்று ஓடியதை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்து அவசர அவசரமாக கீழே இறங்கினர். அவர்கள் பின்னர் வேறு பஸ்சில் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலும் தரமற்ற அரசு பஸ்களே இயக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள், பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கொடைக்கானல், பன்றிமலை, ஆடலூர், பெரும்பாறை உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்கு தரமற்ற பஸ்கள் இயக்கப்படுவதால் நடுவழியில் பழுதாகி நின்று விடுகிறது. மேலும் சில பஸ்கள் தரமற்ற முறையில் இருப்பதால் பயணிகளே இறங்கி தள்ளினால்தான் நகரும் நிலை ஏற்படுகிறது.
மாவட்டத்தில் இதுபோன்ற அவலம் தொடரும் நிலையில் இனிமேலாவது தரமான அரசு பஸ்களை இயக்க பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.