என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஈரோடு புறநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை
- பெருந்துறை சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
- விளை நிலங்களின் பல பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றது.
ஈரோடு:
அக்னி நட்சத்திர காலம் நடைபெற்று வரும் நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வானில் கருமேகங்கள் சூழ்ந்து மலை தூரி வருகிறது.
இதைத்தொடர்ந்து நேற்று பகல் 2 மணி வரை வானில் மேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீச துவங்கியது. இதைத் தொடர்ந்து மாலை 4 மணி முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மேலும் மலைப்பகுதிகளான தாளவாடி, ஆசனூர், கடம்பூர் மற்றும் அந்தியூரில் கனமழை பெய்தது. கோபி, பவானி, மொடக்குறிச்சி, பெருந்துறை மற்றும் சென்னிமலை பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.
நம்பியூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று மாலை திடீரென கன மழை பெய்ய தொடங்கியது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக நம்பியூர் அருகே உள்ள சந்தன நகர் பகுதியில் உள்ள குளம் நிரம்பி உடைப்பு ஏற்பட்டது. தொடர் கனமழை காரணமாக குளத்திற்கு அதிக அளவு தண்ணீர் வரத்து இருந்ததை தொடர்ந்து, குளத்தில் இருந்த தண்ணீர் முழுமையாக வெளியேறி வருகிறது. இந்த குளத்தில் இருந்து தண்ணீர் சந்தன நகர், ஆண்டிக்காடு, கோரக்காடு, ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் வழியாக வெளியேறி வருகிறது. இந்த பகுதியில் உள்ள குளம் உடைப்பு ஏற்பட்டதால் இங்குள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகும் அபாயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் தாழ்வான இடங்களில் வசித்து வரும் பொதுமக்கள் மேடான பகுதிக்கு செல்லவும், கால்நடைகளை பாதுகாப்பாக வைக்கவும், காவல்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் மழை நீர் முழுவதும் தாழ்வான பகுதிகள் வழியாக வெளியேறியதால் வீடுகளுக்குள் புகவில்லை. இந்நிலையில் இன்று காலை குளம் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.
சென்னிமலை யூனியன், வாய்ப்பாடி ஊராட்சி, வாய்ப்பாடி, விஜயமங்கலம் ஆர்.எஸ்., ரெயில்வே பாலம் அடியில் நேற்று மாலை பெய்த மழை பெய்தது. அப்போது ரெயில்வே பாலம் அடியில் கார் ஒன்று சென்றது. அப்போது கார் நீரில் மூழ்கியது. காரில் இருந்தோர் வெளியேறினர். அதை தொடர்ந்து பெரிய டாரஸ் லாரி ஒன்று மழை தண்ணீரில் சிக்கிக் கொண்டது. இதை ஜே.சி.பி. மூலம் வெளியே எடுக்கப்பட்டது. கார் மட்டும் தண்ணிருக்குள் முழ்கி உள்ளது. இதையடுத்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றினர். ரெயில்வே பாலத்தில் நடுப்பகுதியில் சுமார் 10 அடி உயரத்தண்ணீர் உள்ளது. இன்று காலை தண்ணீரில் மூழ்கி இருந்த காரை வெளியே எடுத்தனர். கார் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
பெருந்துறை சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. பெருந்துறையில் மாலை 3 மணிக்கு தொடங்கி 5 மணி வரையிலும் கன மழை பெய்தது. அதன் பிறகு லேசான சாரல் மழை அவ்வப்போது விட்டு விட்டு பெய்தது. இதனால் பெருந்துறையை சுற்றியுள்ள விளை நிலங்களின் பல பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றது. மழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. விஜயமங்கலம் பகுதியில் மலையங்குட்டை, மொடவாட்டு குட்டைகளுக்கு செல்லும் நீர்வழிப் பாதை அடைக்கப்பட்டதால் குட்டைகளுக்கு மழைநீர் செல்லாமல் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நின்றது. பெருந்துறை சிப்காட்டிலும் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நின்றது. தற்போது இந்த மழையால் வறட்சி நீங்கி காய்ந்துபோன கரும்பு, வாழை போன்ற பயிர்களுக்கும், சோளம், கம்பு, நிலக்கடலை, மக்காச்சோளம் போன்ற மானா வாரி பயிர்களுக்கும் வரப்பிரசாதமாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் குடிநீர் தட்டுப்பாடு நீங்கி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மழை இல்லாமல் புல் பூண்டு காய்ந்து கிடந்த நிலையில் தற்போதைய மழையால் மீண்டும் துளிர்க்கத் தொடங்கியுள்ளதால் கால்நடைகளுக்கு தீவன பஞ்சம் குறையும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்ட பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- தாளவாடி-71, பெருந்துறை-57, அம்மாபேட்டை-35, நம்பியூர்-26, பவானி-24, சென்னிமலை-18, கவுந்தபாடி-18, குண்டேரிபள்ளம்-9, கோபி-9, வரட்டுபள்ளம்-9, சத்தி-7, ஈரோடு-6, கொடிவேரி-6, பவானிசாகர் -4, மொடக்குறிச்சி-4 கொடுமுடி-4.