என் மலர்
உள்ளூர் செய்திகள்

மன்னராட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை திண்ணை பிரசாரம் தொடர்ந்து நடக்கும்- ஆர்.பி.உதயகுமார்

- 2026 தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த அதிரடி வியூகம்
- திமுக மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
தமிழகத்தில் 32 ஆண்டுகாலம் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ஆட்சியில் அமர்ந்து முத்தான பல்வேறு திட்டங்களை, வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை தந்தது அ.தி.மு.க.தான். எம்.ஜி.ஆர்., ஜெயலலதா ஆகியோரது அயராத பணியால் அ.தி.மு.க. என்ற ஆலமரம் ஆயிரம் காலத்து பயிராக மலர்ந்து உள்ளது.
ஏழை, எளிய மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த இந்த மாபெரும் தலைவர்கள் கட்டிக்காத்த இயக்கத்தை இன்றைக்கு வலிமையோடும், பொலிவோடும் பொதுச் செயலாளர் எடப்பாடியார் வழி நடத்தி வருகிறார். எடப்பாடயார் சாமானிய தொண்டனும் உச்ச பதவி அடையலாம் என்ற இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. ஆட்சியை சுமார் நாலரை ஆண்டு காலம் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நல்லாட்சி நடத்தியவர் எடப்பாடியார்.
வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களான அரசு பள்ளிகளில் படித்த மாணவர்க ளுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவித உள் இடஒதுக்கீடு வழங்கியதுடன், ஒரே ஆண்டில் 13 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் அமைத்தும் சாதனை படைத்தார். நீர் மேலாண்மை பாதுகாக்க குடிமராமத்து உள்ளிட்ட சிறப்பான திட்டங்களை தந்தவர் தான் எடப்பாடியார்.
ஆனால் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. 4 ஆண்டுகள் முடியும் தருவாயில் கூட மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரிச்சுமைகளை மக்கள் மீது திணித்து வருகிறார்கள்.
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் விரும்பும் திட்டமான தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவி, மகளிருக்கு இருசக்கர வாகன திட்டம், கால்நடை வழங்கும் திட்டம், மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டம் உள்ளிட்ட சிறப்பான திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஆளும் தி.மு.க. அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறுத்திவிட்டார் .
ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க மறுத்ததுடன், தி.மு.க. அரசு மக்களாட்சி தத்துவத்தையும் மறந்து மன்னர் ஆட்சியாக தமிழகத்தில் ஒரு மோசமான ஆட்சியை செய்து வருகிறது.
தி.மு.க. ஆட்சியில் மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், போலீசார் என்று யாருக்குமே பாதுகாப்பு இல்லாத ஒரு அசாதாரணமான சூழ்நிலை நிலவி வருகிறது. எங்கு பார்த்தாலும் பாலியல் அத்துமீறல்கள், வழிப்பறி கொள்ளைகள், ஆதாய கொலைகள், போதை பொருள் நடமாட்டம் என்று அமைதிப் பூங்காவான தமிழகம் இன்றைக்கு அமளிக்காடாக மாறி இருக்கிறது. இதனை மாற்றும் சக்தி வாக்காளர்களாகிய மக்களிடம் உள்ளது.
எனவே தான் கடந்த கால அ.தி.மு.க. அரசின் சாதனைகளையும், தி.மு.க. என்ற மன்னர் ஆட்சியில் தொடரும் வேதனைகளையும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் எடப்பாடியாரின் வழிகாட்டுதலோடு அம்மா பேரவை சார்பில் வீதிவீதியாக, வீடு, வீடாக சென்று திண்ணை பிரசாரம் என்ற பெயரில் துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கி வருகிறோம்.
அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக 82 மாவட்டங்களிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் திண்ணைப் பிரசா ரம் நடந்து வருகிறது. இது வரை 5 வாரங்கள் நடத்தப்பட்டுள்ளது. அடுத்த வெள்ளிக்கிழமை 6-வது வாரமாக 82 பகுதியிலும் நடைபெறுகிறது.
ஒவ்வொரு வாரமும் சுமார் ஒரு லட்சம் மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறோம். இதில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வமாக பங்கேற்கிறார்கள்.
வியாபாரிகள் பொதுமக்களும் எங்களின் துண்டுப் பிரசுரங்களை ஆர்வத்துடன் வந்து வாங்கி செல்கிறார்கள். இதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் தி.மு.க. அரசு மீது எந்த அளவுக்கு வெறுப்பு உள்ளது என்பதை அறிய முடிகிறது. எனவே இந்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க. என்ற மன்னர் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை தொடர்ந்து நடைபெறும்.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் வரை தொடர்ந்து இந்த திண்ணை பிரசாரம் நடக்கும். ஒவ்வொரு வார மும் வேறு மாதிரியான துண்டு பிரசுரங்கள் அச்ச டிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கி வழங்கப்படுகிறது.
வருகிற 2026 பொது தேர்தலில் மக்கள் அ.தி.மு.கவை மீண்டும் தமிழக ஆட்சி அரியணையில் ஏற்று வார்கள். பொதுச்செயலாளர் எடப்பாடியார் மக்களின் முதலமைச்சராக பதவியேற்பார். அப்போது தி.மு.க. அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. அரசின் வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள் அனைத்தும் மீண்டும் மக்களுக்கு தங்கு தடை இன்றி கிடைக்கும்.
வரிச்சுமையும் மக்களிடம் இருந்து இறக்கி வைக்கப்படும். எனவே இந்த மாற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திட அம்மா பேரவை நடத்தி வரும் திண்ணை பிரசாரம் ஒரு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.