என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேயர் சரவணனிடம் மனு கொடுத்த அ.தி.மு.க. நிர்வாகிகள்.
பாளை மார்க்கெட் அம்மா உணவகம் அருகே கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க வேண்டும்- மேயரிடம் அ.தி.மு.க. நிர்வாகிகள் மனு

- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் வயிறார உணவு உண்பதற்காக அம்மா உணவகங்களை ஏற்படுத்தித் தந்தார்.
- அம்மா உணவகம் அருகே கழிவுகள், மது பாட்டில்கள் கிடக்கிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி யில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இதில் மேயர் சரவணன் தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து குறைகள் தொடர்பான மனுக்களை பெற்றுக் கொண்டார். துணை கமிஷனர் தாணு மூர்த்தி முன்னிலை வகித்தார்.
நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா அறிவுறுத்தலின் பேரில் பகுதி செயலாளர் காந்தி வெங்கடாஜலம், சிந்து முருகன் ஆகியோர் தலைமையில் முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன் மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க ஆட்சிக்காலத்தின் போது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் வயிறார உணவு உண்பதற்காக குறைந்த செலவில் இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் உள்ளிட்டவை ஏழைகளுக்கு கிடைக்க வழிவகை செய்யும் விதமாக அம்மா உணவகங்களை ஏற்படுத்தித் தந்தார்.
தற்போது தி.மு.க. ஆட்சி காலத்தில் அந்த உணவகங்களை அவர்கள் கண்டு கொள்வதில்லை. தரமற்ற உணவுகள் வழங்குகின்றனர். பாளை மண்டலத்துக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தின் அருகே மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் வந்து செல்பவர்களின் வசதிக்காக கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது.
இதனால் அந்த பகுதியில் உள்ள அம்மா உணவகம் அருகே மனித கழிவுகள், மது பாட்டில்கள் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் முகம் சுழிக்கின்றனர். உடனடியாக இந்த கழிப்பிடங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
அப்போது பாளை பகுதி மாணவர் அணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், நெல்லை பகுதி துணைச் செயலாளர் மாரிசன், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன், நிர்வாகிகள் பாளை ரமேஷ், பாறையடி மணி, சம்சுல்தான், பக்கீர் மைதீன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.