என் மலர்
உள்ளூர் செய்திகள்
டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு போர்டு வைத்த மக்களால் பரபரப்பு
- டாஸ்மாக் கடை அருகே பஸ் நிறுத்தம் உள்ளது.
- குடிமகன்களால் பல்வேறு தொந்தரவுகளை எங்கள் பகுதி மக்கள் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம்.
ஈரோடு:
தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்களது நீண்ட கால பிரச்சனைகளை நிறைவேற்றாததை கண்டித்து ஆங்காங்கே மக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.
அதன்படி ஈரோடு சூரம்பட்டி பகுதியில் உள்ள திரு.வி.க. வீதி பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை கண்டித்தும், அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தியும் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு போர்டு வைத்து உள்ளனர்.
மேலும் அதன் மேல் பகுதியில் கருப்பு கொடி கட்டி உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
ஈரோடு சூரம்பட்டி திரு.வீ.க. வீதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். சூரம்பட்டி காந்தி ஜி மெயின் ரோட்டில் வலது புறம் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. எங்கள் பகுதி ஜனத்தொகை அதிகம் உள்ள நெருக்கடியான பகுதியாகும்.
இங்கு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். டாஸ்மாக் கடை அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. மேலும் குழந்தைகள் நல மருத்துவமனையும் அமைந்துள்ளது.
டாஸ்மாக் கடையில் மது அருந்த வருபவர்கள் ஆங்காங்கே குடித்து விட்டு வாந்தி எடுத்து ரோட்டில் படுத்துக் கிடக்கின்றனர். சிலர் அலங்கோலமான நிலையில் உள்ளனர். இந்த பகுதியை கடந்து செல்ல பள்ளி மாணவ- மாணவிகள், பெண்கள் கடும் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் மது பாட்டில்களை ரோட்டில் போட்டு உடைத்தும் சென்று விடுகின்றனர். குடிமகன்களால் பல்வேறு தொந்தரவுகளை எங்கள் பகுதி மக்கள் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம்.
எனவே உடனடியாக இந்த மதுபான கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஏற்கனவே பலமுறை மனு அளித்தோம். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. டாஸ்மாக் கடையை அகற்றாததை கண்டித்து வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் திரு.வீ.க பகுதிக்கு உடனடியாக சென்று அப்பகுதி மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை யில் ஈடுபட்டு வருகின்றனர்.