என் மலர்
உள்ளூர் செய்திகள்

2 லாரிகள் நேருக்கு நேர் மோதி தீ பிடித்தது- டிரைவர் கருகி பலி

- டேங்கர் லாரியின் இருந்த கிளீனர் கீழே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் இருந்து சிமெண்டு கலவை ஏற்றி கொண்டு இன்று அதிகாலை டேங்கர் லாரி திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தது.
டேங்கர் லாரியை அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரகு என்பவர் ஓட்டிச் சென்றார்.
பாச்சல் அருகே டேங்கர் லாரி சென்ற போது எதிரே வந்த மினி சரக்கு லாரி மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் 2 வாகனங்களும் திடீரென தீப்பிடித்து எரிந்தன. மளமளவென தீ பரவியதால் 2 வாகனங்களும் தீயில் கருகின. வாகனங்களின் டயர்களும் வெடித்து சிதறின.
இந்த கோர விபத்தில் மினி சரக்கு லாரியை ஓட்டி வந்த டிரைவர் பிரதாப் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். டேங்கர் லாரியின் இருந்த கிளீனர் கீழே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
டேங்கர் லாரியை ஓட்டி வந்த ரகு தீயில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அந்தப்பகுதியில் சென்று கொண்டிருந்தவர்கள் பாய்ச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், சக்திவேல் ஆகியோர் தீயில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரகுவை மீட்டனர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான பிரதாபின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் தீயில் எரிந்து கொண்டிருந்த 2 வாகனங்களையும் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மினி சரக்கு லாரி டிரைவர் தீயில் இருந்து தப்பிக்க தனது வாகனத்தின் வலது புற கதவை திறக்க முயன்றபோது கதவு திறக்க முடியாமல் போனதால் வாகனத்திலேயே உடல் கருகி பலியானது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தால் திருவண்ணாமலை-பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.