என் மலர்
உள்ளூர் செய்திகள்
பொங்கலூர் பகுதியில் 6 மாதத்தில் அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்படும்
- பயனாளிகளுக்கு கடந்த 12 வாரங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை
- ரேஷன் கடை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கி தர வேண்டும்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றிய குழு கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார் வரவேற்று பேசினார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் லோகுபிரசாந்த், ஸ்ரீ பிரியா, துளசிமணி, ராஜேஸ்வரி, கங்கா, சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:- ஜோதிபாசு (இ.கம்யூ):- தொங்குட்டிபாளையம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் பணி செய்யும் பயனாளிகளுக்கு கடந்த 12 வாரங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. பெண்கள் மற்றும் வயதானவர்கள் பணம் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கே.ஆண்டிப்பாளையத்திலுள்ள அங்கன்வாடி பழுதடைந்து தற்போது அதை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அங்கன்வாடியில் உள்ள 15 குழந்தைகள் மாற்று இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே புதிதாக அங்கன்வாடி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். டி. ஆண்டிப்பாளையம் பகுதியில் உள்ள குட்டைகளை மேம்பாடு செய்ய வேண்டும். டி.ஆண்டிப்பாளையத்தில் ரேஷன் கடை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கி தர வேண்டும்.
ஊராட்சியில் உள்ள அனைத்து தாழ்த்தப்பட்ட காலனி பகுதியில் அமைந்துள்ள கான்கிரீட் சாலைகள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும். அத்திக்கடவு குடிநீர் சரிவர கிடைப்பதில்லை. எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணாபுரத்திற்கு பஸ் வசதி செய்து தர வேண்டும்.
பாலகிருஷ்ணன்(தி.மு.க):- தெற்கு அவினாசிபாளையத்தில் உள்ள மின் மயானத்திற்கு முன்புறமாக செல்லும் சாலையை கான்கிரீட் சாலையாக அமைத்து தர வேண்டும்.
வக்கீல்.எஸ்.குமார் (ஒன்றிய சேர்மன்):- ஒன்றிய பகுதிகளில் பெரும்பாலும் பழுதடைந்துள்ள சாலைகளை மேம்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கவுன்சிலரின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு பின்னர் ரேஷன் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாவிபாளையம், வடமலைபாளையம் மற்றும் தொங்குட்டிபாளையம் பகுதிகளில் பஸ் வசதி கேட்டுள்ளீர்கள்.
ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் தற்போது ஆட்கள் தேர்வு பணி நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் பஸ் வசதி செய்து தருவதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இன்னும் சுமார் ஒரு 6 மாத காலத்திற்குள்ளாக அனைத்து சாலைகளும் மேம்பாடு செய்து தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முடிவில் ஒன்றிய குழு துணை தலைவர் அபிராமி அசோகன் நன்றி கூறினார்.