என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
மிஷன் இயற்கை திட்டம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு விருது
- பல்லுயிர், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் குறித்து தேவையான விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
- 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை ஈடுபடுத்தலாம்.
திருப்பூர் :
இளைய தலைமுறையினர் தங்கள் மாநிலத்தின் பல்லுயிர், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் குறித்து தேவையான விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.அதற்காக, மிஷன் இயற்கை திட்டம் பள்ளிகளில் உள்ள சுற்றுசூழல் மன்றங்கள் வாயிலாக செயல்படுத்தப்படுவதால், மாணவர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதோடு சுற்றுச்சூழல் மன்ற நடவடிக்கைகளை வலுப்படுத்த உதவும்.
இதற்காக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கான செயல்முறை பயிற்சி நிறைவடைந்த நிலையில், சுற்றுச்சூழல் ஆசிரியர்களுக்கு, இத்திட்டத்திற்கான வழிகாட்டு பயிற்சிகள் இணையவழியில் நடந்தது. நேரடியாக பயிற்சி வரும் 21-ந் தேதி முதல் 24ந் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்கீழ் ஒவ்வொரு பள்ளிகளிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை ஈடுபடுத்தலாம். பள்ளி வாரியாக, 5 மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் பெயர்களை சுற்றுச்சூழல் ஆசிரியர் மற்றும் 'WWF india' வின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 10ந் தேதி வரை வாரத்தில் 5 மணி நேரம் மாணவர்கள், ஆசிரியர்கள் இதுசார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.இதன் வீடியோ ,அறிக்கைகள் அடிப்படையில் சிறப்பாக செயல்படும் 5 பள்ளிகள் மற்றும் 25 மாணவர்களுக்கு 2023 பிப்ரவரி மாதம் மாநில விருது வழங்கப்படும் என திருப்பூர் மாவட்ட கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.