என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![நகராட்சி தலைவரை கொல்ல சதி? உடுமலை போலீஸ் நிலையத்தை தி.மு.க.வினர் முற்றுகை நகராட்சி தலைவரை கொல்ல சதி? உடுமலை போலீஸ் நிலையத்தை தி.மு.க.வினர் முற்றுகை](https://media.maalaimalar.com/h-upload/2022/09/15/1762160-untitled-1.jpg)
போலீஸ் நிலையம் முன்பு திரண்ட தி.மு.க.வினர். சரணடைந்த ஷேக் தாவூத்.
நகராட்சி தலைவரை கொல்ல சதி? உடுமலை போலீஸ் நிலையத்தை தி.மு.க.வினர் முற்றுகை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- உடுமலை நகராட்சித் தலைவர் மத்தீனை கொலை செய்ய சதி நடப்பதாக தெரிவித்துள்ளார்.
- வாகனத்தை நிறுத்தாமல் பாதுகாப்பாக திரும்புமாறு போலீசார் எச்சரித்துள்ளனர்.
உடுமலை :
உடுமலை போலீஸ் நிலையத்துக்குள் கையில் பளபளக்கும் கத்தியுடன் வாலிபர் ஒருவர் நுழைந்தார்.உடனடியாக அவரிடமிருந்த கத்தியை பறித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் உடுமலை நகராட்சித் தலைவர் மத்தீனை கொலை செய்ய சதி நடப்பதாக தெரிவித்துள்ளார்.உடனடியாக பொள்ளாச்சி சென்று விட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த மத்தீனை தொடர்பு கொண்டு வழியில் எங்கும் வாகனத்தை நிறுத்தாமல் பாதுகாப்பாக திரும்புமாறு போலீசார் எச்சரித்துள்ளனர்.அத்துடன் அந்தியூர் பகுதியில் வந்து கொண்டிருந்தவரை போலீசார் சென்று பாதுகாப்புடன் உடுமலை அழைத்து வந்துள்ளனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஏராளமான தி.மு.க.வினர் உடுமலை போலீஸ் நிலையத்தில் திரண்டனர்.சம்பவம் குறித்து தி.மு.க.வினர் கூறியதாவது:-நகராட்சித் தலைவர் மத்தீனை கொலை செய்யும் நோக்கத்தில் கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர் வந்துள்ளனர்.அவர்கள் சரணடைந்துள்ள ஷேக் தாவூத் என்ற இந்த நபரிடம் நகராட்சித் தலைவரின் புகைப்படத்தைக் காட்டியுள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்தியுடன் போலீசில் சரணடைந்துள்ளார்.எனவே அந்த மர்ம நபர்கள் யார்? அவர்களை ஏவியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகராட்சித் தலைவருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்'என்று கூறினர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-சரணடைந்த நபர் பெயர் ஷேக் தாவூத்(வயது 21).தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சேர்ந்த இவரது குடும்பத்தினர் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன் உடுமலை வந்துள்ளனர்.இவருக்குத் திருமணம் ஆகி மனைவி பிரிந்து சென்றுள்ளார். பிறந்த குழந்தை இறந்து விட்டதால் பாதிக்கப்பட்ட இவர் ஊர் ஊராகச் சுற்றி வந்துள்ளார்.மேலும் உடுமலையிலேயே டீ மாஸ்டர்,பூ வியாபாரம் என பல வேலைகளை செய்துள்ளார்.தற்போது போலீஸ் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்த இவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்து வருகிறார்.அவர் கூறிய தகவல்கள் உண்மையா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.அவரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பல இடங்களில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம் என்று போலீசார் கூறினர்.கூலிப்படையை ஏவி உடுமலை நகராட்சித் தலைவரைக் கொல்ல சதி நடந்துள்ளதாக தகவல் பரவியதால் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.