என் மலர்
உள்ளூர் செய்திகள்
கம்பு செயல் விளக்கத்திடல் அமைக்க மானியம் - வேளாண்மைத்துறையினர் தகவல்
- கம்பு மற்றும் உளுந்து செயல்விளக்கத் திடல் அமைக்க அழைப்பு விடுத்துள்ளனர்.
- சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் வட்டாரத்தில் மானியத்திட்டத்தில் கம்பு மற்றும் உளுந்து செயல்விளக்கத் திடல் அமைக்க வேளாண்மைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆரோக்கியமான உணவு வகைகளில் சிறுதானியங்களுக்கு முதலிடம் உண்டு. நமது முன்னோர்கள் காலத்தில் பிரதான உணவாக, தினசரி பயன்பாட்டில் இருந்த சிறுதானியங்கள் தற்போது சிறப்பு உணவாக, எப்போதாவது பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. எனவே மீண்டும் சிறுதானிய பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநிலஅரசுகள் பல்வேறு மானியத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அத்துடன் நடப்பு ஆண்டை மத்திய அரசு சிறுதானிய ஆண்டாக அறிவித்து, சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அந்தவகையில் மடத்துக்குளம் வட்டாரத்தில் 100 ஏக்கரில் கம்பு மற்றும் 65 ஏக்கரில் உளுந்து செயல்விளக்கத் திடல் அமைக்க மானியம் வழங்கப்படவுள்ளது.
இது குறித்து வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:-
மடத்துக்குளம் வட்டாரத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டத்தில் 100 ஏக்கரில் கம்பு செயல்விளக்கத் திடல் அமைக்க ஏக்கருக்கு ரூ. 2400 மானியம் வழங்கப்படவுள்ளது. மேலும் 65 ஏக்கரில் உளுந்து செயல் விளக்கத்திடல் அமைக்கும் வகையில் ஏக்கருக்கு ரூ. 1740 மானியமாக வழங்கப்படவுள்ளது.இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் வேளாண்மைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இதுதவிர விவசாயிகள் பயன்பெறும் வகையில் உயிர் உரங்கள், நுண்ணூட்டங்கள், விதைகள் உள்ளிட்டவை விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளது.அந்தவகையில் மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அலுவலக சேமிப்புக் கிடங்கில் உயர் விளைச்சல் ரகங்களைச் சேர்ந்த 4 டன் உளுந்து, 12 டன் நெல் விதைகள் இருப்பு உள்ளது. இதுதவிர பாரம்பரிய ரகமான தூயமல்லி நெல் விதை 280 கிலோ மற்றும் சோளம் 97 கிலோ இருப்பு உள்ளது. இதனை பெற்று விவசாயிகள் பயனடையலாம்.
இவ்வாறு வேளாண்மைத்துறையினர் கூறினர்.