search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களை கட்டும் மார்கழி மாத வழிபாடு
    X

    களை கட்டும் மார்கழி மாத வழிபாடு

    • உடல், உள்ளத்தை நல்லவிதமாக ஆக்குவதற்கு உரிய மாதம் மார்கழி.
    • அனைத்து கோவில்களிலும் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணியளவில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    திருப்பூர் :

    உடல், உள்ளத்தை நல்லவிதமாக ஆக்குவதற்கு உரிய மாதம் மார்கழி. ஆண்டாள் பிறந்த நாள், திருமாங்கல்ய நோன்பு, ஆருத்ரா மஹா தரிசனம், வைகுண்ட ஏகாதசி என விசேஷ நாட்கள் இம்மாதத்தில் தான் இடம் பெறும்.அனைத்து கோவில்களிலும் மார்கழி மாதம் அதிகாலை நேரத்தில் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை, உற்சவர் திருவீதியுலா, பக்தி பாடல்கள் பாராயணம், சிவாலயங்களில் தேவாரம், திருவாசகம் முற்றோதல், வைணவ தலங்களில் திருப்பாவை, திருவெம்பாவை இசைத்தல் என பக்தி மணம் கமழும். பிரசித்தி பெற்ற கோவில்களில் தொடர் பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும். நேற்று மார்கழி மாதம் பிறப்பையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் அதிகாலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும் பெண்கள் வீட்டு வாசலில் மாக்கோலம், பொடிக்கோலம் போட்டு, மஞ்சள், மாட்டு சாணம் ஆகியவற்றில் பிள்ளையார் பிடித்து வைத்து அதன் மீது பூக்கள் வைத்தும், அகல் விளக்குகள் வைத்தும் வழிபட தொடங்கி உள்ளனர்.

    திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில், வீரராகவ பெருமாள் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், திருப்பூர் அய்யப்பன் கோவில், குருவாயூரப்பன் கோவில், திருப்பூர் - திருப்பதி கோவில், கோட்டை மாரியம்மன், போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், சுக்ரீஸ்வரர் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணியளவில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    அவிநாசி, திருப்பூரில் சிவனடியார் திருக்கூட்டத்தினர் ரத வீதிகளில் வலம் வந்து திருவெம்பாவை, திருப்பாவை, தேவாரம், நாலாயிர திவ்யபிரபந்தம் ஆகியவற்றை பாடி வழிபடுகின்றனர்.

    மார்கழி மாத சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு கடைகளில் பூஜை பொருட்கள், நைவேத்யம் மற்றும் அபிேஷக பொருட்கள், பிரசாதம் செய்து வழங்க சுண்டல், பொங்கல், சாத வகைகளுக்கான பொருள் வகைகள், பூ, மாலை ரகங்கள், கோலம் போடப் பயன்படுத்தும் வெள்ளை மற்றும் வண்ண கோலப் பொடிகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×