என் மலர்
உள்ளூர் செய்திகள்
தீபாவளி காற்று மாசு திருப்பூரில் 5-ந்தேதி முதல் ஆய்வு தொடக்கம்
- தீபாவளி கொண்டாட்டத்தில் விதவிதமான பட்டாசு ரகங்களை வாங்கி வெடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
- மாசுகட்டுப்பாடு வாரிய ஆய்வக முதன்மை விஞ்ஞானி கல்யாணி தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வு மேற்கொள்கின்றனர்.
திருப்பூர்:
தீபாவளி கொண்டாட்டத்தில் விதவிதமான பட்டாசு ரகங்களை வாங்கி வெடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. கண்களுக்கும், மனதுக்கும் மகிழ்ச்சி தந்தாலும்கூட அதிக அளவில் பட்டாசு ரகங்கள் வெடிப்பது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது.
மாசுகட்டுப்பாடு வாரியம் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது, அனைத்து மாவட்டங்களிலும் காற்றுமாசு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தயாரிக்கிறது.
வரும் 12ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், பின்னலாடை நகரான திருப்பூரில் வருகிற 5-ந் தேதி முதல் காற்றுமாசு ஆய்வு துவங்கப்பட உள்ளது. மாசுகட்டுப்பாடு வாரிய ஆய்வக முதன்மை விஞ்ஞானி கல்யாணி தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வு மேற்கொள்கின்றனர்.
வருகிற 5-ந் தேதி காலை, 6 மணி முதல் முதல் 19 தேதி காலை 6 மணி வரை, தொடர்ந்து 15 நாட்கள் காற்று மாசு ஆய்வு செய்யப்பட உள்ளது. 5 ந் தேதி முதல் 11-ந் தேதி வரை, பண்டிகைக்கு முந்தைய காற்று மாசு,12ந் தேதி முதல் பண்டிகை கால காற்று மாசு ஆய்வு செய்யப்படுகிறது.
காற்று மாசு கணக்கிடுவதற்காக திருப்பூர் குமரன் வணிக வளாகம் மற்றும் ராயபுரத்தில் உள்ள மாசுகட்டுப்பாடு வாரிய பறக்கும்படை அலுவலகத்தில், ஆம்பியன் ஏர் குவாலிட்டி மெஷர்மென்ட் கருவி வைக்கப்படுகிறது.
காற்றில் கலந்துள்ள 10 மைக்ரானுக்கு கீழ் உள்ள நுண் துகள்கள் (பி.எம்.,10), 2.5 மைக்ரானுக்கு கீழ் உள்ள நுண் துகள்கள் (பி.எம்.,2.5), சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை அக்சைடு அளவுகள் கணக்கிடப்பட உள்ளது. அதேபோல் வருகிற 6ந் தேதி பண்டிகைக்கு முந்தைய ஒலி மாசு, 12-ந் பண்டிகை நாள் ஒலிமாசு அளவிடப்படுகிறது.
இந்த ஆய்வு வாயிலாக திருப்பூரில் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசு ரகங்கள் அதிகம் வெடிக்கப்பட்டுள்ளனவா, முந்தைய ஆண்டைவிட இந்தாண்டு காற்று மாசு கட்டுப்பாட்டில் உள்ளதா ,எல்லை மீறியுள்ளதா போன்ற விவரங்கள் தெரியவரும்.