search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜவுளித்துறை நிலைத்து நிற்க பஞ்சு மீதான இறக்குமதி வரி  ரத்து செய்யப்படுமா?  - உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
    X

    கோப்புபடம். 

    ஜவுளித்துறை நிலைத்து நிற்க பஞ்சு மீதான இறக்குமதி வரி ரத்து செய்யப்படுமா? - உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு

    • தற்போது 40ம் எண்நூல் ஒரு கிலோ 245 ரூபாய்க்கும், 60ம் எண் நூல் ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    • பல மில்கள் தினமும் ஒரு லட்சம் ரூபாய் முதல் இரண்டு லட்ச ரூபாய் இழப்புடன் இயங்கி வருகின்றன.

    திருப்பூர்:

    கோவை புறநகரில் சரவணம்பட்டி, கோவில்பாளையம், அன்னூர் மற்றும் புளியம்பட்டி பகுதியில் 3,000 முதல் 50 ஆயிரம் ஸ்பின்டில் திறன் வரை உள்ள ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து பருத்தி மற்றும் பஞ்சு கொள்முதல் செய்து நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு பெரும்பாலும் 40 மற்றும் 60ம் எண் நூல் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.இங்கு உற்பத்தியாகும் நூல் சோமனூர், திருப்பூர், ஈரோடு மற்றும் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    அன்னூர் தாலுகாவில் மட்டும் கரியாம்பாளையம், குன்னத்தூர், கெம்பநாயக்கன்பாளையம், பொகலுார், பசூர், கஞ்சப்பள்ளி உட்பட பல பகுதிகளில் 110 ஸ்பின்னிங் மில்கள் உள்ளன.கடந்த சில மாதங்களாக 3 ஷிப்டுகள் இயங்கி வந்த ஸ்பின்னிங் மில்கள், இரண்டு ஷிப்டுகளாக மாறின. தற்போது ஒரு ஷிப்ட் மட்டுமே இயங்கி வருகின்றன. ஒரு சில மில்கள் மட்டுமே இரண்டு ஷிப்டுகள் இயங்குகின்றன. சில ஸ்பின்னிங் மில்கள் வாரத்திற்கு 2 நாள் விடுமுறை அறிவித்துள்ளன.சில மில்களில் ஒடிசா, பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வரவழைத்திருந்த தொழிலாளர்களுக்கு நீண்ட விடுமுறை அளித்து அனுப்பி விட்டனர்.

    இது குறித்து ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:-

    கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு ஸ்பின்னிங் மில்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது, 356 கிலோ எடையுள்ள ஒரு கண்டி பஞ்சு 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பஞ்சில் நூல் உற்பத்தி செய்யும்போது ஒரு கிலோ நூல் வங்கிக் கடனுக்கான வட்டி இல்லாமல் 283 ரூபாய் அசல் ஆகிறது.

    தற்போது 40ம் எண்நூல் ஒரு கிலோ 245 ரூபாய்க்கும், 60ம் எண் நூல் ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோவுக்கு 33 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதிலும் வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டியை சேர்த்தால் ஒரு கிலோவுக்கு 50 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. பல மில்கள் தினமும் ஒரு லட்சம் ரூபாய் முதல் இரண்டு லட்ச ரூபாய் இழப்புடன் இயங்கி வருகின்றன. இந்த நிலை மீண்டு விடும் என்கிற நம்பிக்கையில் நஷ்டத்துடன் விற்பனை செய்து வருகின்றனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக தொழிலாளர்களுக்கு வேலை தரும் ஜவுளித்துறை நிலைத்து நிற்க மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    மத்திய மாநில அரசுகள் உடனடியாக நூற்பாலைகளுக்கு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். தற்போது வசூலிக்கப்படும் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும். ஸ்பின்னிங் மில் முதலீட்டுக்கு மானியம் அளிக்க வேண்டும். உள்ளூரிலேயே பருத்தி அதிக அளவில் விளைவிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு பருத்தி, பஞ்சு ஏற்றுமதி செய்யக்கூடாது. நூல் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும். அதிக கட்டுப்பாடு விதிக்க வேண்டும். நுால் ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் சலுகை தர வேண்டும் என்றனர்.

    இந்தநிலையில் பஞ்சு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில், மத்திய ஜவுளித்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இது குறித்து விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(பெடக்சில்) துணைத்தலைவர் பல்லடத்தை சேர்ந்த சக்திவேல் கூறியதாவது:-

    ஜவுளி தொழில் துறை சார்பில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் ஆகியோரை, குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடந்த நிகழ்ச்சியின்போது சந்தித்து, கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. விஸ்கோஸ் மற்றும் செயற்கை நூல் இழைகளுக்கு, மத்திய அரசின் பல்வேறு தர கட்டுப்பாட்டு ஆணைகள் மூலம் கட்டாய சான்று பெறும் விதிமுறை நடைமுறையில் உள்ளது. ஜவுளி உற்பத்தி தொழில் வளர்ச்சிக்கு, இது பெரும் தடையாக உள்ளது. விஸ்கோஸ் மற்றும் செயற்கை நூல் இழைக்கு அரசின் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தில் இருந்து,விலக்கு அளிக்க வேண்டும்.

    உள்நாட்டில் போதிய அளவு பருத்தி சாகுபடி கிடையாது. துணி உற்பத்திக்கு தேவையான பருத்தி - பஞ்சினை வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்தாக வேண்டும் என்ற நிலை உள்ளது. இவ்வாறு, இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கு 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இது துணி உற்பத்தி செலவை அதிகரிக்க செய்கிறது.உள்நாட்டில் பருத்தி சாகுபடியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் துணி உற்பத்தியை பெருக்கி ஏற்றுமதி வாய்ப்பை அதிகப்படுத்த முடியும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×