என் மலர்
உள்ளூர் செய்திகள்
உணவுப்பொருள் உற்பத்தி குறையும் ஆபத்து - இயற்கை விவசாயமே இந்தியாவை வல்லரசாக்கும் : தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை
- 50 கிலோ எடை கொண்ட பொட்டாஷ் உரம் ரூ.2 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
- மணிச்சத்து கொடுக்கும் சூப்பர் பாஸ்பேட் விலையும் அதிகரித்துள்ளது.
காங்கயம் :
உரம் விலை உயர்வு, உரங்களின் மானியம் குறைந்துள்ளது ஆகியவற்றாலும் மத்திய அரசு அலட்சியத்தாலும் உணவுப்பொருள் உற்பத்தி குறையும் பேராபத்து உள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
பயிர்களுக்குத் தழைச்சத்து கொடுக்கும் யூரியாவைத் தவிர அனைத்து உரங்கள் விலையும் கண்மூடித்தனமாக உயர்த்தப்பட்டுள்ளது. மானியமும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. 50 கிலோ எடை கொண்ட பொட்டாஷ் உரம் ரூ.1000-க்கு விற்கப்பட்டு வந்தது. இது ரூ.2 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. மணிச்சத்து கொடுக்கும் சூப்பர் பாஸ்பேட் விலையும் அதிகரித்துள்ளது. நுண்ணூட்டுச் சத்துக்களைக் கொடுக்கும் உரங்களும் விலை உயர்வில் இருந்து தப்பிவிடவில்லை.இன்று காம்ப்ளக்ஸ் உரம் எங்கும் கிடைப்பதில்லை. நிலத்திற்கு தலைச்சத்து கொடுக்கும் யூரியாவைக் கூடுதலாகப் போட்டால் நோய் பெருமளவில் தாக்கும். விளைச்சல் வெகுவாகக் குறையும். சமையல் எண்ணெய் தேவையில் 70 சதவீதம் இறக்குமதி எண்ணையே பூர்த்தி செய்து வருகிறது. பருப்பு நுகர்வில் இது 60 சதவீதமாக உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் உரம் விலையைக் கூட்டினால் இறக்குமதி அதிகரிக்கும். நாட்டிற்கு அந்நிய செலவாணி இழப்புக்கூடும். உணவுப் பற்றாக்குறை கடுமையாக இருக்கும்.இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. 140 கோடி மக்கள் தொகை இருக்கும் நாட்டில் உடனடியாக இயற்கை விவசாயத்திற்கு மாறுவது என்பது பேராபத்து.
இலங்கை அரசு பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது உரப் பயன்பாட்டை உடனடியாக நிறுத்தியதே ஆகும். இலங்கையிடமிருந்து இந்திய அரசு இந்த பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இல்லாமல் போனால் விளைவுகள் விபரீதமாக இருக்கும். 1947-ல் இந்தியாவின் மக்கள் தொகை 27 கோடி. மக்கள் தொகைப் பெருக்கத்தை அரசு கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்.
இன்று நாட்டில் உள்ள 140 கோடி மக்களுக்கும் உணவு கொடுக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. இதைக் கருத்தில் கொண்டு உரம் விலை உயர்வை அரசு கைவிட வேண்டும்.மேலும் உரங்களின் மீதான சரக்கு - சேவை வரியை முற்றிலும் நீக்க வேண்டும். படிப்படியாக இயற்கை விவசாயத்திற்கு மாறுவதே இந்தியாவை வல்லரசாக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.