என் மலர்
உள்ளூர் செய்திகள்
பின்னலாடை ஏற்றுமதி- தொழிலாளர் மேம்பாட்டுக்கு உதவும் திருப்பூர் தொழில் பங்களிப்போர் குழு தொடக்கம்
- திருப்பூர் தொழில் பங்களிப்போர்கள் குழு தொடக்க விழா திருப்பூர் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
- 'திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கூட்டு முயற்சியால் தொழில் பங்களிப்போர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் பின்னலாடை தொழில் மற்றும் தொழிலாளர்களின் மேம்பாட்டுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கும் வகையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் அங்கமான திருப்பூர் தொழில் பங்களிப்போர்கள் குழு தொடக்க விழா திருப்பூர் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
விழாவுக்கு வந்திருந்தவர்களை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் இளங்கோவன் வரவேற்றார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் பேசும்போது, 'திருப்பூர் தொழில் பங்களிப்போர்கள் குழுவில் தொழிற்சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிலாளர் துறை, தொழிற்சாலை பாதுகாப்புத்துறை மற்றும் இங்கிலாந்தின் எத்திக்கல் டிரேடிங் இனிசியேட்டிவ் நிறுவனம் ஆகியவை உறுப்பினராக இணைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கான பிரச்சினைகளை களைவதற்கும், பின்னலாடை ஏற்றுமதி தொழில் மேம்பாட்டுக்கும் உதவும். உலக அளவிலான தொழில் பங்களிப்போர்கள் இந்த குழுவில் இணைந்திருப்பது மகிழ்ச்சி' என்றார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசும்போது, 'திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கூட்டு முயற்சியால் தொழில் பங்களிப்போர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூரின் வளர்ச்சிக்கு இந்த குழு மிகவும் உதவும்' என்றார்.
எத்திக்கல் டிரேடிங் இனிசியேட்டிவ் நிறுவன முதன்மை இயக்குனர் பீட்டர் மெக்அலிஸ்டர் பேசும்போது, 'அனைத்து தரப்பினர் குழுவில் இணைந்திருப்பதால் தொழில் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக அமையும் என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் பேசும்போது, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழில் நிலைத்து நிற்பதற்கு, அனைத்து காலங்களிலும் தொழிற்சங்கத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக அமைந்துள்ளது. அந்த ஒத்துழைப்பு தொடர வேண்டும் என்றார்.தொ.மு.ச. பனியன் தொழிற்சங்க பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் பேசும்போது, 'திருப்பூர் பனியன் தொழில் மேம்பாட்டுக்கும், தொழில் பங்களிப்போர் குழு செயல்பாட்டுக்கும் என்றைக்கும் தொ.மு.ச. துணை நிற்கும்' என்றார். சேவ் அமைப்பு நிறுவனர் அலோசியஸ் இந்த குழுவுக்கு தங்கள் ஒத்துழைப்பு இருக்கும் என்றார்.
முடிவில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் ராஜ்குமார் ராமசாமி நன்றி கூறினார்.இந்த கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கம், எம்.எல்.எப்., எச்.எம்.எஸ். சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.