என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் செல்வராஜ் எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்தபடம்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் - தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

- தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
- வாக்குச்சாவடி முகவர்கள் நடைபெற உள்ள சிறப்பு வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில் கவனமுடன் பணியாற்ற வேண்டும்.
திருப்பூர் :
தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருப்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வின் பிறந்தநாள் விழா வருகிற 27-ந் தேதி வருகிறது. அந்த நாளில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும், மரக்கன்று நட்டும் சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் வருகிற 26, 27-ந் தேதிகளில் நடைபெற உள்ள சிறப்பு வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில் கவனமுடன் பணியாற்ற வேண்டும். வட்ட, கிளை செயலாளர்கள் தங்களுக்கு உரிய வாக்குச்சாவடிகளுக்கு 100 வாக்காளர்களுக்கு ஒரு முகவரை நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் இல்லந்தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையை வேகப்படுத்த மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட, கிளை இளைஞரணியினர் பங்காற்ற செயலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், பி.ஆர்.செந்தில்குமார், செந்தூர் முத்து, பகுதி செயலாளர்கள் ராமதாஸ், ஜோதி, இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் சிவபாலன், கோட்டா பாலு மற்றும் மாநகர, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.